Ticker

3/recent/ticker-posts

குடும்பத்தில் சந்தோசம் தழைத்தோங்க கணவன் மற்றும் மனைவிக்கு சில அறிவுரைகள்

குடும்பத்தில்  சந்தோசம் தழைத்தோங்க  கணவன் மற்றும் மனைவிக்கு சில அறிவுரைகள்
பெண்ணின் பெற்றோர் தாம் பெண்ணை உரிய பருவத்தில் ஒரு ஆடவன் கையில் ஒப்படைத்து இன்றுமுதல் இவளுக்கு சர்வமும் நீங்களே.  தாய்க்கு தாயாகவும் தந்தைக்கு தந்தையாகவும் இவளைப் பாதுகாக்கும் பொறுப்பு உங்களுடையது என்று தத்தம் செய்து கொடுப்பதை ஒவ்வொரு கணவனும் எண்ணிப்பார்க்க வேண்டும். அடித்தாலும் அணைத்தாலும் நாம் தானே தவிர அவளுக்கு யார் இருக்கிறார்கள் என்ற பெருந்தன்மையான குணம் ஒவ்வொரு கணவனுக்கும் வாய்க்க வேண்டும். 

குடும்பம் என்பது ஆட்சிக்கொப்பானது.  அந்த ஆட்சிப் பொறுப்பு இல்லத்தரசியிடம் ஒப்படைக்கப்படுகிறது.  குடும்ப பாரத்தை ஏற்க மனைவியை கட்டுப்படுத்துதல் கூடாது.  வாழ்க்கை முறை எவ்வாறு அமைய வேண்டும் என்று அவளுக்குத் தெரியாதா?  சில கணவன்மார் தொட்டதற்கெல்லாம் மனைவியை கோபித்துக் கொள்வார்கள்.  மனைவியிடம் சில குறைகள் காணப்படலாம்.  குறை இல்லாதோர் மனிதராகார்.  மனைவியிடம் காணும் சிறு குறைகளை பெரிது படுத்தி அதற்காக ஒரு மகாபாரத போர் தொடுக்கக் கூடாது.

குடும்ப வாழ்க்கையில் பிரவேசிக்க முதன்முதலில் தன்னிடம் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.  திருமணம் ஆவதற்கு முன்பு எதேச்சையாக திரிந்து வந்தது போல குடும்பஸ்தான பின்பும் திரியக் கூடாது.  அப்படி வெளியே சுற்றிவிட்டு இரவு நெடுநேரம் சென்று வீடு திரும்பும் பழக்கத்தை திருமணமானதும்  விட்டொழிக்க வேண்டும்.  தனக்காக ஒருத்தி வீட்டில் காத்துகொண்டு இருப்பாள்.  அந்த நினைவுகளை நெஞ்சில் நிறுத்திக் கொண்டு இருக்க வேண்டும்.  நண்பர்களோடு சேர்ந்து சீட்டாடுதல்,  சினிமா நாடகம் பார்ப்பதும்,  வெளியூருக்கு உல்லாச பயணம் செய்வதும்,  மங்கை ஒருத்தியை பிடிப்பதற்கு முன்னால் இருக்கலாமே தவிர மணந்த பின் தொடரக் கூடாது.

கணவன் செய்யும் தவறை கண்டிக்கும் உரிமை மனைவிக்கு உண்டு. நேரங் கடந்த நேரத்தில் வீடு வந்து கதவிடிப்பதும்  கண்ட கண்ட நண்பர்களோடு சேர்ந்து கொண்டு காசை கரியாக்கும் பொறுப்பற்ற தன்மையால் குடும்பத்தை கவனிக்காமல் நாடோடி போல ஊர் சுற்றுவதை காணும் மனைவி தன் கணவன் போக்கை கண்டிக்கும் உரிமை பூரணமாகப் பெற்றவள்.

கணவனை கண்டிப்பது மனைவியின் கடமைகளில் ஒன்று.  கண்டிக்கும் மனைவி கணவன் கண்ஷக்கு  கடும் நஞ்சாக தோன்றுகிறாள். கணவன் சினம் கொள்கிறான்.  மனம் போனபடி மனைவியை பேசுகிறான்.  சினத்தின் மேலீட்டால் மனைவியை தாறுமாறாக அடித்து காயப்படுத்துவதையும் பார்க்கிறோம். இத்தகைய மனித தன்மை வாய்ந்ததா?  படிப்பில்லாத அல்லது ஜென்மங்கள் கூட அத்தகைய செயல் புரிந்தாலும் பரவாயில்லையே படித்தவர்கள் பட்டம் பெற்றவர்கள் உயர்ந்த அந்தஸ்தில் உள்ளவர்கள் இப்படி மிருகத்தனமாக நடந்து கொள்ளலாமா?  

சில பெண்கள் செய்த தவறைத் திரும்பத் திரும்பச் செய்வதும் உண்டு.  அதற்காக அவர்களை மிருகத்தனமாக அடிப்பது கூடாது. அன்பினால் அகிலத்தையும் கட்டி ஆளலாமே.  வாஞ்சையினால்  கல் மனதையும் கரைய வைக்கலாம். கொல்லும் வேங்கையும் கொடும் புலியும்  அன்பிற்கும்  வாஞ்சைக்கும்  அடிபணிந்து அடங்கிவிடும் என்றால் பெண்கள் தாம் அடங்காமல் போவார்கள்? 

பொறுமை கடலினும் பெரிது. மனைவியின் குற்றங்குறைகளை பொறுமையுடன்  சகித்து அக்குறைகள் மேலும் நேராதபடி பார்த்துக் கொள்வதுதான் மனிதத் தன்மை.  மனித தர்மம் கூட.  

சில மாமியார் கணவன் மனைவி இன்பமாய் வாழ்வதை காண சகிக்க மாட்டார்கள்.  "இதென்னடா அநியாயம். நான் ஒருத்தி இருப்பதை மறந்து இப்படி ஆட்டம் போடுகிறீர்களே"  என்று அங்கலாய்த்துக் கொள்வததையே தொழிலாகக் கொள்வார்கள். பெண்டாட்டியை சுற்றித்திரிகிறானே  மனுசனா இவன்? என்றும் நேற்று வந்தவளை தலைமேல் வைத்துக் கொண்டு ஆடுகிறானே அவன் புத்தி ஏன் இப்படி கெட்டுப் போச்சு?  என்ற புகார் கிளப்பவும் தயங்கமாட்டார்கள்.

சில மாமியார்மார் மருமகள் செய்யும் ஒவ்வொரு காரியத்திலும் குறை காண்பதில் நாட்டம் உள்ளவராக இருப்பார்.  அவள் மீது இல்லாததும் பொல்லாததுமாக தன் மகனிடம் சொல்லி மனைவியை அடிக்க செய்துவிடுவார்கள்.  

இப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில் கணவன் அதாவது குடும்பத்தலைவன் மிக சாதுர்யமாக நடந்து கொள்ள வேண்டும்.  மனைவியை கண்டித்தாரல் தான் தாயின் மனம் சாந்தி அடையும் என்பதை உணர்ந்து மனைவியை ஜாடைமாடையாக கண்டிக்கத்தான் வேண்டும். தாயின் மனதை போர்க்களமாக்கிவிட்டால்  பிறகு அந்த போர்க்களத்தில் அமைதியை சிருஷ்டிப்பது அரும்பெரும்காரியமாகிவிடும்.  என் மனைவி இப்படித்தான் நடந்து கொள்வாள். இதைத்தான் செய்வாள்  என்று ஒரு கணவன் தன் மனைவிக்காக பரிந்துபேசுவானானால்  சில தாய்மார் பெரிய யுத்தகளத்தையே சிருஷ்டித்து விடுவார்கள்.  அவர்களுக்கு ஆதரவாக மாமியார் ஸ்தானத்தில் உள்ளவர்கள் படையெடுத்து வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சில குடும்பங்களில் கணவனும் மனைவியும் ஓயாமல் சண்டையிட்டுக் கொள்வதை பார்க்கலாம். சண்டையும் சச்சரவும் ஆக உள்ள குடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் எங்கனம் நிலவும்? 

மனைவியிடத்தில் கணவன் அன்பு மாரி பொழிய வேண்டும்.  இனிக்க இனிக்கப் பேசி இன்புற வேண்டும்.  தலைவி விரும்பும் பொருளை தட்டாமல் வாங்கித் தரவேண்டும்.  பலகாரம் வாங்கிக் கொடுக்கலாம்.  தினமும் வெளியே சென்று வீடு திரும்பும் போது மலர்ச்செண்டு,  கதம்பம்,  பழம் முதலியவை வாங்கி வந்து மனைவிக்குக் கொடுக்க வேண்டும்.  மனைவியை மகிழ்விக்க கணவன் கடமைப்பட்டவனாவான். நகை நட்டு வாங்கி கொடுத்து மனைவியை மகிழ்விக்க முடியாதவர்கள் குறைந்தபட்சம் நல்ல சேலை ரவிக்கைகள் வாங்கிக் கொடுக்கலாம். 

மனைவி கர்ப்பம் தரிக்கும் காலத்தில் அவள் மனதில் சதா மகிழ்வூட்ட வேண்டும். மனக்கவலை சற்றும் அவளை அஷகாதபடி அவளை பார்த்துக்கொள்ள வேண்டும்.  அவள் விருப்பம் அறிந்து கொண்டவனவற்றை வாங்கித் தர கணவன்  சற்றும் தயங்க கூடாது. கணவனே  கண்கண்ட தெய்வம் என நம்பி இருக்கம் மனைவிக்கு கணவனைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்?

குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு பம்பரம்போல் சுழன்றுக் கொண்டிருக்கும் தலைவிக்கு பொழுது போக்கு அவசியம் தேவை. கடற்கரை, சினிமா, நாடகம் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்ல தவறாலாகாது.  பிள்ளையைப் பெற்றெடுப்பது என்பது மறுபிறவி எடுப்பது போன்றது. ஆகவே நிறைகர்ப்பினியாக உள்ள பெண்களை மனங்கோணாதவாறு  பேணுதல் கணவன்மாரின் தலையாய கடமையாகும். 

சில கணவன்மார் மனைவியரை காரணமின்றி என்று சந்தேகித்து குடும்ப வாழ்வில் கசப்பை உண்டாக்கி கொள்கிறார்கள்.  சந்தேகம் என்ற நச்சுப் பாம்பு குடும்பம் என்ற பூங்காவில் புகுந்து விடும்.  அதனால் குடும்பம் குட்டிச்சுவராக்கி விடும் என்பதில் சந்தேகமில்லை.  

குடும்ப வாழ்வில் குதூகலம் கூத்தாடவேண்டுமானால் கணவன் மனைவிக்கிடையே அபிப்ராய பேதமும் சண்டை சச்சரவோ,  விட்டுக் கொடுக்காத மனப்பான்மையோ  தலைக்காட்ட விடக்கூடாது. 

கணவன்மார் இந்த விஷயங்களில் அதிக அக்கறையும் கவனமும் செலுத்துதல் வேண்டும்.  கணவனே கண்கண்ட தெய்வம் என்ற நற்பண்புடைய  தமிழ் பெண்கள் தங்கள் கணவன்மாரை தெய்வமென போற்றுதல் வேண்டும். 

கணவனை நெஞ்சார நேசிக்க வேண்டும்.  உள்ளத்தில் பகையும் உதட்டில் உறவும் வைத்துக்கொள்ளக்கூடாது.  காம பைத்தியம் கொண்டு கணவனை பகைத்து கொள்வார்கள் சில பெண்கள் பெரும் தவறு.  பட்டு சேலையும் பகட்டு வாழ்வும்தான் பிரதானம் அல்ல எனக் கருதும் பாவையரும் உளர். பட்டுச் சேலைக்கு தரும்  மதிப்பில் பாதி அளவு கூட கணவனுக்கு தர மறுக்கும் மங்கையர் திலகங்கள் பட்டோடோபத்திற்கு அடிமையானவர்களே. 

அன்பான பேச்சும், அடக்கமான தன்மையும், எளிய வாழ்க்கையும் பெண்களிடம் பூரணமாக இருக்க வேண்டும். கணவன் ஒன்று சொல்லும் முன் அவன் மேல் பாய்ந்து கவ்வும் சுபாவம் சுபாவம் மனைவிக்கு இருக்கக்கூடாது.  கணவனின் விருப்பம் போல நடப்பவள் தான் உத்தமி. அவள்தான் மனைத்தக்க மாண்புடைய நங்கை.

தாய்க்குப்பின் தாரம் என்று கூறப்படும் தாரக மந்திரத்தின் கருத்துதான் என்ன?

தாய் தன் பிள்ளையை எடுத்து அன்பு மழை பொழிவாள்.  அதைப்போலவே மனைவியும் தன் கணவனிடத்தில் அன்பு மழை பொழிந்து அகமகிழ்ச் செய்ய வேண்டும்.  தாய் தன் மகளுக்கு அறுசுவை உண்டி படைத்து ஊட்டமளித்து வளர்ப்பாள்.  மனைவியும் தன் கணவனுக்கு பல்சுவையுடன் கூடிய நல்ல உணவு படைத்து அவன் உடலுக்கு தெம்பூட்டுவாள்.  அன்பு காட்டுவதில் தாயைப் போலவும் பணிவிடை செய்து உபசரிப்பதில் ஒரு வேலைக்காரி ஆகவும் ஆலோசனை கூறுவதில் அமைச்சராகவும் மனைவி ஒரு கணவனுக்கு இருக்க வேண்டும். அதே நேரத்தில் தாம்பத்தியத்தில் ஒரு விலைமாது போல சுகம் தருபவளாக இருக்கவேண்டும். 

கணவனுக்கு மனைவி அன்பு காட்டி உபசரிப்பதில் கஷ்டம் ஒன்றும் இருக்க முடியாது.  காசு கொடுத்து வாங்க கூடிய பொருள் அல்ல அன்பு.  அது நெஞ்சின் அடித்தளத்திலிருந்து பிறக்கின்றது.  அவர்களுக்கு அன்பு வாய் வழியாகவும் செயல் மூலமாக வெளிப்படுகிறது.  ஆகவே கணவனோடு அன்பாக பேசவும்  வாஞ்சையோடு உபசரிக்கவும் மனைவியும் கஷ்டப்படுத்த இல்லையே.  

கணவனுக்கு பணிவிடை செய்வதை சில மனைவிமார்கள் கேவலமாகவும் சுமையாகக் கருதுவார்கள்.  கட்டிய கணவனுக்கு பணி புரிவதா கேவலம்?  
மனைவிமார்கள் தங்கள் கணவரையும் அதிகமாக நேசிக்க வேண்டும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் யாரும் கெட்டுப்போவதில்லை.  எனவே கணவன்மார்கள் மற்றும் மனைவிமார்கள் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து, ஒருவருக்கொருவர் அன்புகூர்ந்து சந்தோசமாக வாழக்கை நடத்தலாம். எனவே, குடும்பத்தில்  சந்தோசம் தழைத்தோங்க  கணவன் மற்றும் மனைவிக்கு மேற்சொல்லப்பட்ட சில அறிவுரைகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கம் என கருதுகிறேன்.

Post a Comment

0 Comments