எதற்கெடுத்தாலும் கடன் வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த பதிவு. - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, August 8, 2020

எதற்கெடுத்தாலும் கடன் வாங்குபவரா நீங்கள்? உங்களுக்கு தான் இந்த பதிவு.

எதற்கெடுத்தாலும் கடன் வாங்குபவரா நீங்கள்?  உங்களுக்கு தான் இந்த பதிவு. 

நம்முடைய செல்வத்தை போற்றி வளர்க்க நமக்கு வேண்டுவது மனப்பக்குவம். கிட்டாத பலாக்காயினும்  கிட்டிய களாகாயே சிறந்தது அல்லவா?  ஆகவே கிடைத்த பொருளை பற்றி மகிழ்ச்சி அடையாமல் கிடைக்காத பொருளைப்பற்றி எண்ணி ஏங்கக்கூடாது.  அத்தகையோர் காலப்போக்கில் கையிலிருக்கிற பொருளையும் இழந்து விடுவார்கள்.  

சிக்கனம் கஞ்சத்தனமா?

பாரத நாட்டில் பெரும்பாலான மக்கள் நடுத்தர ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள்.  இவர்கள் தம் குடும்பச் செலவை தன் வருமானத்திற்கு தக்கவாறு வகுத்துக் கொள்ளாததால் பிரச்சினைகள் குழப்பங்கள் தகராறுகள் எழுகின்றன.  அவமானங்கள் நேர்கின்றன.  அதனால் எல்லாரும் கருமியாக இருக்க வேண்டும் என்று கூறுவதாகப் பொருள் அல்ல.  சிக்கனம் கஞ்சத்தனம் அல்ல.  பொய்யான கெளரவம் போலியான  வாழ்க்கை வாழக்கூடாது என்பதுதான் பொருள்.

பாழ்செய்யும் பழக்கங்கள் 

நொந்தும் வெந்தும் பெற்றோர் அனுப்பும் பணத்தை திரைப்படங்களுக்கும், ஆடம்பர ஆடைகளுக்கும், சிற்றுண்டிகளும் செலவழிக்க மாணவர்கள் எத்தனை பேர்?

கல்விக்குக் கொடுக்கும் பணத்தை பிளாக்கில் டிக்கெட் வாங்கி சினிமா பார்த்து சீரழியும் பிள்ளைகள் எத்தனை பேர்?

பெல்பாட்டம், லுங்கி, சல்வார்  என வேளைக்கு ஒரு உடை உடுத்தி வீண்விரயம் செய்யும் மகளிர் எத்தனை பேர்?

கையில் பணம் இல்லாவிட்டாலும் பத்து பேரிடம் கடன் வாங்கி வீண் ஆடம்பர திருமணங்களையும் விருந்துகளையும் நடத்தும் குடும்பத்தலைவர்கள் தாம் எத்தனை பேர்?

அதிக வட்டிக்கு கடன் வாங்கி பண்டிகைக்கால உல்லாச பொழுதுபோக்கு நண்பர்களுக்கு விருந்து என்றெல்லாம் விரையும் செய்துவிட்டு சம்பள தினத்தன்று பத்து ரூபாயை கையில் பெற்று கடன்காரனைக் அஞ்சி ஓடும் அலுவலர் கள்தாம் எத்தனைபேர்?

வீண் பெருமைக்காக சொந்தமாக மனை மீது கடன் வாங்கி வீட்டை கட்டி முடிவில்  அக்கடனை கொடுக்க இயலாமல்,   இருக்கும் வீட்டை இழந்து விட்டு சிறு வீட்டில் குடியிருக்கும் சொந்தக்காரர்கள் தாம் எத்தனை பேர்?

பழைய நகைகளை இஷ்டம்போல் அழித்து புதுமாதிரியாக செய்யப் பணவரையம் செய்யம்  பெண்கள் எத்தனை பேர்?

நல்ல உபயோகமுள்ள உள்நாட்டு பொருட்களை மதிக்காது வெளிநாட்டுப் பொருட்களின் மீது மோகம் கொள்ளும் நபர்கள் எத்தனை பேர்?

நாகரீகம் என்ற பெயரில் இந்த தவறான வாழ்வை வாழ ஏன் முயல வேண்டும்? 

செலவு செய்தாலும் சிக்கனமாக இருப்பவனே இன்ப வாழ்வு வாழ்பவன் என்றார் டாக்டர் ஜான்சன். உண்மைதானே?  

இதற்காக விருந்துக்கு செல்லக்கூடாது.  கலை நிகழ்ச்சிகளை கண்டு களிக்கக்கூடாது என்று எவரும் கருதக்கூடாது.  கண்ணை மூடிக்கொண்டு தன் நிலைமைக்கு மீறி கண்டபடி செலவழிக்கக் கூடாது என்றுதான் கூறுகிறோம்.

தன் சக்திக்கு மீறின வாழ்க்கை என்பது கூடவே கூடாது.  பொதுவாக தேவையற்ற ஆடம்பர வாழ்க்கையை நாம் எங்கும் காண்கிறோம்.  தங்களுடைய தேவைகளை மீறிய வாழ்க்கை நடத்துகிறார்கள்.  இதன் பலனாக வியாபாரம் நொடிந்துப் போய் ஓட்டாண்டியாய் கோர்ட்களில் கைதிபோல் நிற்கிறார்கள்.  காரணம் போலி அந்தஸ்து. 

நிலை மறைக்க வேஷமிடுவதா?

சிலர் தாங்கள் நடுத்தர குடும்ப த்தைச் சார்ந்தவர்கள்,  ஏழைகள் என்று பிறர் அறியாவண்ணம் வாழ விரும்புகிறார்கள்.  அதனால் அவர்கள் தங்களின் ஏழழ்மை நிலையை மறைக்க பல வேஷங்கள் போடுகிறார்கள்.  கடன் வாங்கியேனும் பணத்தை செலவழிக்க அவர்கள் தயங்குவதில்லை.  தன் நண்பர்களின் மகிழ்ச்சிக்காக அவர்கள் பணத்தை அள்ளி இரைக்கிறார்கள்.  ஆனால் செல்வம் எல்லாம் சீரழிந்து கடனாளியாக நிற்கும் போது அவர்களை காப்பாற்ற எந்த நண்பர்கூட்டம முன் வரும்?  பணம் குறையத் தொடங்கின உடனேயே  நீர் வற்றிய குளத்தை  விட்டு நீர்ப் பறவைகள் பறந்து செல்வது போல் நண்பர் கூட்டம் கலைந்து போய்விடும். அப்போது தெரியும் பணத்தின் அருமை. 

மற்றொரு போல் நாமும் வாழ வேண்டும் என்று கருதுவதும் சீர்கேடான நிலைக்கு காரணம்.  

சபலத்திற்கு ஆட்படாமல் மனத்தை அடக்கி ஆளவேண்டும்.

கடன்,  வருவாய்க்கு மேற்பட்டு செலவு செய்யத் தூண்டுகிறது.  

நட்பை அழிக்கிறது.  

மரியாதையையும் கௌரவத்தையும் நாசம் செய்கிறது.  பொய் பேச செய்கிறது. 

கடன் கொடுத்தவருக்கு அடிமையாக்குகிறது.

மன அமைதியை அழிக்கிறது.

உற்றார் உறவினர்களையும் கவலையில் ஆழ்த்துகிறது.

பறவை  தானாக கட்டும் கூடு நீண்ட நாட்களுக்கு நிலைத்து நிற்பதில்லை.  ஆனால் அதை பிடித்து அடைக்கும்  நிலையானது  என்கிறார் தாகூர்.  கடன் என்பது நம்மை அடைக்கும் நிலையான தங்கக் கூண்டு.  அது தேவையில்லை.  சிக்கனமாய் வாழ்ந்து நாமே நமக்கு நல்ல கூட்டினை அமைத்துக் கொள்ள முயற்சி செய்வோம்.  நாம் வளர்ச்சிக்குக் குறுக்கே நிற்பது நாம் மனோபாவம் தான்.  எனவே, எதற்கெடுத்தாலும் கடன் வாங்காமல் வாழப் பழகிக்கொள்வோம். சிக்கனத்தைக் கடைப் பிடிப்போம். மகிழ்ச்சியுடன் வாழஙவோம்.