கேட்டபடி கிடைத்த வரம் - தமிழ் சிறுகதைகள் - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, September 6, 2020

கேட்டபடி கிடைத்த வரம் - தமிழ் சிறுகதைகள்

கேட்டபடி கிடைத்த வரம் - தமிழ் சிறுகதைகள் 


நசுக்குண்டு குற்றுயிறும் குறையுருமாய் வந்து விழுந்த கொசு உடலை  நெளித்தது.  ஒருவாறு உயிர் தப்பியது.  அதற்கு கொஞ்சம் ஆறுதல். 

யாரோ சிரிப்பது கேட்டது
கொசு திரும்பி பார்த்தது

 மூட்டை பூச்சி ஒன்று அவனை பார்த்து சிரித்தது

 உடலில் கடிக்க உட்கார்ந்த தன்னை மனிதன் நசுக்கி எறிந்நதுகூட அந்த கொசுவுக்கு வலிக்கவில்லை. இப்போது தன்னைப் பார்த்து அந்த மூட்டைப்பூச்சி சிரித்தது தான் மிகவும் வலித்தது

கொசுவுக்கு கோபம் வராமல் இல்லை.  ஆனால் அதை காட்டத்தான் முடியவில்லை.  சத்தம் இல்லாமல் போய் கடித்திருக்க வேண்டும் நீ என்றது மூட்டைபூச்சி.  

"சுத்த வீரன் நான்"  "எதிரிக்கு எச்சரிக்கை கொடுக்காமல் தாக்குதல் தொடுப்பது யுத்த தர்மம் அல்ல"  என்றது கொசு.  

சுத்தமாம்,  வீரமாம்,  என்று விழுந்து விழுந்து சிரித்தது மூட்டைப்பூச்சி. 

எதிரிக்கு முன்னெச்சரிக்கை என்று ரீங்காரம் செய்ததில் குறைச்சல் ஒன்றும் இல்லை.  அந்த எதிரி கேடு கெட்ட மனிதன்.

 யுத்தத்தைப் பார்த்தானா?  
தர்மத்தை பார்த்தானா? சுத்தத்தைப்  பார்த்தானா? 

உனக்கே தெரியாமல் உன்னை ஒரே நசுக்கி கசக்கி சுருட்டி விட்டான்.  இவன் விஷயத்தில் போய் தரும நியாயம் என்ன வேண்டிக்கிடக்கிறது என்று நீட்டி முழக்கியது மூட்டை பூச்சி. 

முன்னெச்சரிக்கையாக தான் புகை போடுகிறான். 
கொசுவலை கட்டுகிறான்

 போதாதா என்று இப்போது அவையெல்லாம் எதிரியை தாக்குவதற்கு முன் அவன் விடுகிற எச்சரிக்கை அல்ல தற்காப்பு ஏற்பாடு அவ்வளவுதான். 

என்னைப்பார் சந்தடியில்லாமல் அவன் படுக்கை எங்கும் அவனுக்கே தெரியாமல் ஊர்ந்து ஊர்ந்துப் போவேன்  முட்டைப்பூச்சி சொல்லி முடிக்கும் முன்னர்..... 

இடைமறித்து புறமுதுகில் அவனைத் தாக்கும் நீ ஒரு கோழை என்று இழித்துரைத்தது.  அதுமட்டுமா என்னை தேடி பிடிக்க அவன் விளக்கை எடுத்து தேடி பார்க்கும்போது அவன் பார்வையில் படாதபடி ஓடி ஒளிந்து கொள்கிறேன் அதையும் சொல்லேன் என்றது மூட்டைப்பூச்சி.

அவன் பார்வையில் மட்டும் சிக்கினால் உன்னை தரையோடு தரையாய் தேய்த்து ஒழித்து விடுவான் என்றது கொசு.  

தேய்க்கட்டுமே அப்படி தேய்த்தால் அதிலிருந்து ஒன்றுக்கு நூறாக பெறுகுவோம் நாங்கள்.  மகான் ஒருவர் எங்களுக்குத் தந்த வரம் அது என்றது மூட்டைப்பூச்சி.

 மகானா? வரமா? - கொசு

 ஆமாம் ஆமாம்.  மகான் ஒருவர் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார்.  எங்கள் மூதாதையர் ஒருவர் பார்த்தார். 

விடுவாரா?  மகன் உடலில் ஏறி கடித்து ரத்தத்தை உறிஞ்சினார்.  தூக்கம் கலைந்து எழுந்த மகான் எரிச்சலுடன் அந்த மூட்டைப்பூச்சியை நசுக்கிக் கொன்ற பிறகு நேரத்தைப் பார்த்தார்.  

வழிபாட்டுக் கூட்டத்திற்குப் போக வேண்டிய வேளை வந்து விட்டதை அறிந்தார்.  அடடா இறைவழிபாட்டிற்கு போகாமல் இன்னும் தூங்குகிறாயா என்றல்லவா இந்த மூட்டைப்பூச்சி நம்மை எழுப்பி விடுகிறது?  இது தெரியாமல் அதை நக்கி விட்டோம் என்று வருந்தினார். 

அப்புறம் கதை கேட்கும் ஆர்வத்துடன் கொசு கேட்டது.

மூட்டைப்பூச்சி மேலே தொடர்ந்தது

"எங்கள் மூதாதையரின் ஒன்றான அந்த மூட்டை பூச்சிக்கு அவர் மகான் என்பது தெரியாது.  அது பிரார்த்தனை நேரம் என்பதும் தெரியாது.  அந்த மகானுக்கு மட்டுமே தெரிந்தது.  

அவ்வளவுதான்...  பிரார்த்தனை வேளை அறிந்த தன்னை எழுப்பி விட்ட நல்ல காரியத்துக்காக மூட்டைப்பூச்சியை மெச்சினார்.  ஒரு மூட்டை பூச்சியை நசுக்கினால்  ஒன்றுக்கு நூறாக பெருகும் என்று வரம் கொடுத்தார் அந்த மகான். 

மூட்டைப்பூச்சி அதன் சுய புராணத்தை சொல்லி முடித்த பெருமிதத்துடன் கொசுவை பார்த்தது.  கொசு யோசித்துப் பார்த்தது. கொசு  குலத்துக்கும் யாராவது மகான் இப்படி ஏதாவது வரம் தரக்கூடாதா?  என்று பெருமூச்சு விட்டது. 

 அதனால் என்ன?  இப்போதும் ஒன்றும் கெட்டுவிடவில்லை.  ஏதாவது ஒரு தெய்வத்தை குறித்து தவம் செய்தால் அந்த தெய்வம் காட்சி தரும்.  கேட்ட வரத்தை தரும் என்று கூறியது மூட்டை பூச்சி. 

தவம் செய்யப் புறப்பட்டு விட்டது கொசு

தண்ணீர் பல நாள்களாக தேங்கி இருக்கிற இடம் பார்த்தது.  அப்படி ஒரு இடம் கிடைத்தது.  ஜலஸ்தம்பம் செய்வது போல அந்த நீரின் மீது அமர்ந்து தியானத்தில் ஆழ்ந்து நாட்கள் பல சென்றன.  

பக்தா என்ற குரல் கேட்டு கொசுவின் தவம் கலைந்தது.  

எதிரில் நின்ற தெய்வத்தை பார்த்து விழித்தது.

என்ன பார்க்கிறாய்?  நான் தெய்வமே தான்.  தவம் செய்வது கேவலம் ஆனாலும் சரி தவத்தை மெச்சி காட்சி தர வேண்டும்.  கேட்ட வரத்தை தர வேண்டும்.  இது கடவுள் குலத்தின் தலையெழுத்து என்றது தெய்வம். 

கொசுவுக்கு கொள்ளை மகிழ்ச்சி.  சரி சரி என்ன வரம் வேண்டும் கேள் என்றது தெய்வம்.  

பெரிதாக ஒன்றும் வேண்டாம் 

எதிரிக்கு எச்சரிக்கை விடாமல் தாக்குவது சுத்த வீரம் அல்ல என்று யுத்த தர்மத்தை அனுஷ்டிக்கும் நான் முதலில் அவன் காதருகே சத்தம் கொடுத்து விட்டுத்தான் முற்படுகிறேன்.  

அவனோ எவ்வித அறிவிப்பும் இல்லாமல் என்னை நசுக்கி சுருட்டி எறிந்து விடுகிறான்.  

"உனக்கு சாகா வரம் தர முடியாது" -  தெய்வம். 

"வேண்டாம்,  மனிதனும் என்னைப் போலவே யுத்த தர்மத்தை கடைப் பிடித்தால் போதும்.  என்னை தாக்கும் போது அவனும் முன்னெச்சரிக்கையாக குறைந்தபட்சம் ஏதாவது சத்தம் செய்தால்கூட போதும் என்று வேண்டியது கொசு.

அப்படியே ஆகட்டும் என்று அருள் பாலித்து விட்டு தெய்வம் மறைந்தது. கொசுவுக்கு வரம் பெற்று வந்த பெருமை பிடிபடவில்லை. 

பார்,  இனி மனிதன் பதிலுக்கு முன்னறிவிப்பு செய்து விட்டுத்தான் என்னை தாக்குவான்.  நான் சாமர்த்தியமாய் தப்பிப் பிழைப்பேன் என்று மூட்டைப் பூச்சியிடம்  பெருமையாகத்தான் வரம் வாங்கி வந்து விஷயத்தைச் சொன்னதும் தான் பார்ப்போமே என்றது மூட்டைப்பூச்சி. 

இப்போதே பார்த்துவிடுவோமே என்று பறந்தது கொசு.

அந்தப் பக்கமாய் வந்து கொண்டிருந்த ஒருவனை நெருங்கியது.  ரீங்காரமிட படி அவனை வட்டமிட்டது.  முகத்தை சுற்றி சுற்றி வந்து அவன் கண்ணில் மொய்க்க போனது. 

அவன் கண்ணை நெருங்கியதுதான் தாமதம்.  

பட்டு என்று ஒரு சத்தம் கேட்டது

கொசுவை அடிக்க அவன் கை தட்டிய ஓசை அது.  

திருப்பித் தாக்கும் போது மனிதன் குறைந்தபட்சம் சப்தமாவது செய்ய வேண்டும் என்று கொசு  வாரம் தான்  பலித்தது.  

அந்த வரம் பலித்ததை அறிய  கொசு இப்போது உயிரோடு இல்லை.  முன்னெச்சரிக்கையாக ஒரு சத்தம் அந்த கைதட்டலிலேயே அடக்கம்,  அதுவே செத்துப்போன கொசுவுக்கும் அடக்கம். 

சுத்த வீரம் பேசியபடி செத்து விழுந்த கொசுவைப் பார்த்து மூட்டைப்பூச்சி இப்போதும் "பகபகவென்று"  சிரித்தது.