பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் The King Fisrt Sadaiyavarman Sundhara Pandiyan | The History of Pandiya Nadu பாண்டியர்களின் வரலாறு - ThulirKalvi

Latest

Search Here!

Sunday, September 27, 2020

பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் The King Fisrt Sadaiyavarman Sundhara Pandiyan | The History of Pandiya Nadu பாண்டியர்களின் வரலாறு

பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் The King Fisrt Sadaiyavarman Sundhara Pandiyan  | The History of Pandiyar Nadu பாண்டியர்களின் வரலாறு !!


பாண்டிய மன்னன் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் 

இரண்டாம் மாறவர்மன் சுந்தர பாண்டியனுக்கு பிறகு முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் கிபி 1251 - 1268  என்பான் பாண்டிய நாட்டின் ஆட்சிப்பொறுப்பை ஏற்றான். 

பிற்காலப் பாண்டிய மன்னர்களில் பேரும் புகழும் பெற்றவன் இவனே. இணையற்ற வீரன் இவன்.  பதவிக்கு வந்த பின்னர் தானே பாண்டியநாடு சுடரொளி வீசும் புகழுக்கு உரியதாயிற்று. சோழ நாட்டையும் சேர நாட்டையும் இவன் வென்றான்.  ஆந்திரம் கொங்கு நாடு என எங்கும் மீன் கொடி பறக்கச் செய்தான். 

முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் சோழனே தனக்குத் திறை செலுத்தும் அளவிற்கு வரலாற்றை திருப்பினான்.  ஒய்சலரை வென்று கண்ணூர் கொப்பத்தை முறைகையிட்ட  இவனால் ஒய்சள மன்னன் சோமேஸ்வரன் வீரமரணம் அடைந்தான்.  கோப்பெருஞ்சிங்கனை வென்று நாட்டை கைப்பற்றிய முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் பிறகு அவனுக்கே அந்நாட்டின் மணிமுடியை அவனுடைய நட்பைப் பெற்றான். 

தெலுங்குச் சோழனை வென்று தொண்டை நாட்டை கைப்பற்றிய இவன் இன்னும் வடக்கே படைநடத்தி போய்,  காகதீய அரசனை வீழ்த்தி நெல்லூரைக்  கைப்பற்றினான். அங்கேயே வீர முழுக்குச் செய்துகொண்டான். 

இலங்கையிலும் வெற்றிக்கொடி 

கி பி 1254 - 56 ஆண்டுகளில் இலங்கைக்கும் படையெடுத்துப் போய் அதன் வட பகுதியைக் கைப்பற்றினான் மாவீரனாம் முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன். 

அரசியல் விவேகம், படைபலம், ஈடற்றப் பெரு வீரம்,  கொடை குணம் எல்லாம் ஒருங்கே அமையப்பெற்ற இவன்,  சமஸ்தஜகதாதரன்,  எம் மண்டலமும் கொண்டருளிய ஹேமாச்சாதனராஜா,  மகா ராஜாதிராஜ  ஸ்ரீ பரமேஸ்வர, மரகத பிருதிவி பிரிம்புரங்  கொண்டான்,  எல்லாந் தலையானான் போன்ற பல விருதுப் பெயர்களை அவ்வப்போது தன்னோடு இணைத்துக் கொண்டான். 

திருவரங்கத்திலும் தனக்கு ஒரு முடிசூட்டு விழா நடத்தி கொண்டான்.  சிதம்பரம்,  திருவரங்கம் ஆகிய கோயில்களுக்கு பொன்வேய்ந்த சடையவர்மன் சிதம்பரத்தில் பொன்னம்பலம் ஒன்று கட்டினான்.  திருவரங்கம் கோயிலுக்கு பதினெண் நூறாயிரம் பொன்னைத் தானமாகக் கொடுத்தான்.  

இத்தன்மைகளால் "கோயில் பொன் வேய்ந்த பெருமாள்"  என்னும் விருது பெயரும் பெற்ற இவனைப்பற்றி மார்கோ போலோவின் சுற்றுப்பயண வரலாற்று குறிப்புகளிலும் சிறப்புற காணப்படுகிறது. 

முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் 

சடையவர்மன் சுந்தரபாண்டியனை அடுத்து முடி சூட்டிக்கொண்ட இவனும் பெரும்புகழ் வாய்க்கப்பெற்றான். கிபி 1268 - 1311.  பாண்டிய பேரரசின் அரசியலில் இரண்டாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன்,  மாறவர்மன் விக்கிரமபாண்டியன்,  மூன்றாம் சடையவர்மன் சுந்தர பாண்டியன் ஆகிய மூன்று இளவரசர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.  இவர்களில் மாறவர்மன் விக்ரமனும்,  சடையவர்மன் சுந்தர பாண்டியனும் குலசேகரனின் மக்களாவர். 

மாறவர்மன் குலசேகரபாண்டியன் "எம்மண்டலமும் கொண்டருளிய கோனேரின்மை கொண்டான்"   "கொல்லங் கொண்டான்"  போன்ற பல விருதுகளை பெற்றான்.

கி பி  1274 - ல் சேர நாட்டின் மேல் படையெடுத்து சென்று வென்றான்.  கொல்லத்தை கைப்பற்றிக் கொல்லம்ம் கொண்ட பாண்டியன் என்னும் விருதும் பெற்றான். 

கி பி 1279 இல் மூன்றாம் ராஜேந்திர சோழனையும்,  ஒய்சல மன்னன் ராமநாதனையும்  தனது போர் திறத்தால் வெற்றிகொண்டான்.  அவர்களுடைய நாட்டை தனது நாட்டோடு இணைத்துக் கொண்டான். 

இதையடுத்த இரண்டு ஆண்டுகளில் கடல் கடந்தும் இவன் பார்வை பாய்ந்தது. சிங்களத்தை வென்றான்.  அங்கு பாதுகாத்து வைக்கப்பட்டிருந்த புத்தர் பல்லை,  இவன் படைத்தலைவன் ஆரிய சக்கரவர்த்தி என்பான் மூலம் கைப்பற்றிய வந்தான்.  மூன்றாம் பராக்கிரமபாகு என்ற சிங்கள மன்னன் பிறகு மதுரைக்கு வந்து குலசேகர பாண்டியனுக்கு அடிபணிந்து அந்தப் பல்லைப் பெற்றுச் சென்றான்.  

குலசேகர பாண்டியன் காலத்தில் தான் வெணிஸ் நாட்டுப் பயணி மார்க்கோ போலோ தமிழ்நாட்டுக்கு வந்து போனான். அவனுடைய பயண சரித்திரக் குறிப்புகளில் பாண்டியர் ஆட்சி பற்றியும் பாண்டிய நாட்டின் பண்பாடு வாணிகம் நிதி நிர்வாகம் ஆகியவை பற்றியும் பெருமை பெற கூறப்பட்டிருக்கிறது.

மார்கோபோலோ எழுதிய குறிப்புகளில் சில பகுதிகள் பின்வருமாறு......

"பாண்டியன் செங்கோல் ஆட்சி யில் சிறந்தவன்.  அயல் நாட்டு வணிகர்களிடத்தும் அன்பு காட்டுபவன். அதனாலேயே வெளிநாட்டு வணிகர் எல்லாம் மிகவும் விரும்பி பாண்டிய நாட்டிற்கு வந்தார்கள். 

இந்நாட்டில் காயல் சிறந்த துறைமுகப்பட்டினம்.  இங்கு எப்போதும் வெளிநாட்டுக் கப்பல்கள் நின்றிருக்கும்.  மேலை நாடுகளில் இருந்து வரும் கப்பல்கள் குதிரைகளையும் பிற பொருள்களையும் இந்நகரத்தில் இறக்குமதி செய்கின்றன.  இந்த நாட்டில் குதிரைகள் உற்பத்தி இல்லை.  ஆகையால் குதிரைகள் வாங்க பாண்டிய மன்னன் பெரும் பொருளை செலவிடுகிறான். இந்நாட்டில் விலை உயர்ந்த பெரிய முத்துக்கள் கடலிலிருந்து எடுக்கப்படுகின்றன.  ஏப்ரல் மே மாதங்களில் பணி சிறப்பாக நடக்கிறது.  

இப்படி எடுக்கப்படும் முத்துக்கள் உலக நாடுகளில் எல்லாம் மிக அதிக அளவில் விற்பனையாகின்றன.  விலை உயர்ந்த முத்து பாண்டி நாட்டுக்கு வெளியே செல்லலாகாது என்பது மன்னன்  ஆணை.  

அவனே அதை இரு மடங்கு விலை கொடுத்து வாங்கிக் கொள்கிறான்.  ஆகவே விலைமதிப்பற்ற முத்துக்கள் அவனிடம் அதிகம். ஒரு நகரத்தை கொள்ளை அடித்தால் எவ்வளவு பொருள் கிடைக்குமோ அவ்வளவு பெருமான நகைகளை பாண்டிய மன்னன் அணிந்துள்ளான். அரசு கஜானாவில் பொன்னும் பொருளும் அதிகம்.

அரசனுடைய மெய்க்காப்பாளர்கள் அவன் இறந்தால் தாமும் உடன் கட்டை ஏறுவர்.  பூமாதேவிக்கு மதிப்பளித்து அரசன் முதல் அனைவரும் தரையிலேயே அமர்கிறார்கள்.

வலது கையால் உண்ணுகிறார்கள்.  நீரை தூக்கியே அருந்துவர்.  பாத்திரத்தில் உதடு படும்படி குடிப்பதில்லை.  உடல் உழைப்பை பெரிதும் மதிக்கும் நாட்டு மக்கள் சோம்பலை வெறுக்கின்றனர்.  சிறந்த பண்போடு வாழ்கின்ற இவர்கள் ஜாதகம், சகுனம் பார்ப்பதை விரும்புகிறார்கள். 

பாண்டிய நாடு பற்றிய வாசஃப்  என்ற முகமதிய பயணியின் குறிப்புகள் குறிப்புரைகளும் இந்நாட்டை மிகவும் சிறப்பித்துக் கூறுகின்றன.  பாண்டிய மன்னனின் அமைச்சரவையில் அரபு வணிகர்கள் அமர்ந்திருந்ததாகவும்,  சுங்க அமைச்சு அப்துர்ரகிமான் என்ற முஸ்லிம் ஒருவரின் அதிகாரத்திலிருந்து தாகவும்,  இஸ்லாமிய வரலாற்று குறிப்புகள் தெரிவிக்கின்றன. 

வென்ற நாடுகளிலிருந்து கைப்பற்றிய பொருள்களைக் கொண்டு திருநெல்வேலி திருக்கோவிலில் ஒரு திருச்சுற்று மாளிகை எழுப்பித்தான் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.