டாடா எலக்ட்ரானிக்ஸ் - சாஸ்த்ரா பல்கலை. இணைந்து தைவானில் வி.எல்.எஸ்.ஐ. டிசைன் எம்.டெக். படிப்பு - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, June 30, 2021

டாடா எலக்ட்ரானிக்ஸ் - சாஸ்த்ரா பல்கலை. இணைந்து தைவானில் வி.எல்.எஸ்.ஐ. டிசைன் எம்.டெக். படிப்பு

எலக்ட்ரானிக்ஸ் வடிவமைப்பு மற்றும் உற்பத்தியில் திறன் வாய்ந்த தொழிலாளர்களை உருவாக்கும் வகையில் தைவானில் உள்ள ஆசிய பல்கலைக்கழகம் மற்றும் யுவான்சி பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட டாடா எலக்ட்ரானிக்ஸ், தஞ்சைசாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகம் ஆகியவை ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன. 




இரண்டாண்டு வி.எல்.எஸ்.ஐ. டிசைன் எம்.டெக். பட்டப் படிப்பில் சேரும் மாணவர்கள் முதலாம் ஆண்டு படிப்பை தஞ்சை சாஸ்த்ரா பல்கலைக்கழகத்திலும், 2-ம் ஆண்டு படிப்பை தைவானில் உள்ள ஆசிய பல்கலை. அல்லது யுவான்சி பல்கலைக்கழகத்தில் படிக்க ஆவண செய்யப்படும். முக்கிய ஆய்வகங்களில் நடைமுறை பயிற்சி, 6 மாத செமி கண்டக்டர் உயர் தொழில்நுட்ப உற்பத்தியகங்களில் இன்டர்ன்ஷிப் மற்றும் சீன மொழி பயிற்சி ஆகியவையும் வழங்கப்படும். 


டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் இப்படிப்புக்கான பாடத்திட்டத்தை உருவாக்குவதில் சாஸ்த்ராவுடன் இணைந்து செயல்படும். மேலும்தைவான் சென்று படிப்பதற்கான செலவையும் டாடா ஏற்கும். மாணவர்களுக்கு 2-ம் ஆண்டுக்கான கல்விக் கட்டணம் மற்றும் தைவானில் தங்கி படிப்பதற்கான செலவு ஆகியவை முற்றிலும் இலவசம். இதற்கு ஜூன் 30-ம் தேதி முதல் www.sastra.edu என்ற இணையவழி முகவரி மூலம் விண்ணப்பிக்கலாம். 



இளங்கலை பட்டப் படிப்பு மற்றும் நேர்முக தேர்வு அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். கேட் தேர்வு எழுதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். “இந்த பட்டப் படிப்பு எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஆழமான நிபுணத்துவம் பெறும் வகையில் அமைவதோடு இந்தியாவில் வளர்ந்துவரும் செமி கண்டக்டர் நிறுவனங்களுக்கு பெரிதும் உதவிகரமாக விளங்கும்” என்று சாஸ்த்ராதுணைவேந்தர் எஸ்.வைத்தியசுப்ரமணியம் தெரிவித்தார். டாடா எலக்ட்ரானிக்ஸ் மனித ஆற்றல் மேம்பாட்டு துறைத் தலைவர் ரஞ்சன் பந்தோபாத்யாயா கூறும்போது, “இந்தியா எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தியில் கவனம் செலுத்திவரும் இந்த வேளையில் இப்படிப்பு முக்கியத்துவம் பெறுகிறது” என்றார்.