தினம் ஒரு தகவல் : நிலத்தடி நீர்வளத்தை காக்கும் பனைகள் - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, June 30, 2021

தினம் ஒரு தகவல் : நிலத்தடி நீர்வளத்தை காக்கும் பனைகள்

தினம் ஒரு தகவல் நிலத்தடி நீர்வளத்தை காக்கும் பனைகள் 




 நான்கைந்து தலைமுறைக்கு முன்புவரை பனை சார்ந்த ஏராளமான பொருட்கள் தமிழர்கள் பயன்பாட்டில் இருந்தன. தும்பு, விறகு, ஓலை, நார் என மனிதர்களுக்கு அட்சயப்பாத்திரமாய் என பனை மரங்கள் அப்போதும், இப்போதும் அள்ளித்தந்து கொண்டிருக்கின்றன. மேலும் எறும்பு, பூச்சி, பல்லி, பறவைகள் என நூற்றுக்கும் மேலான உயிரினங்களுக்கு வாழ்விடங்களையும் அளிக்கின்றன.. ஒரு பனை ஆண்டுக்கு 180 லிட்டர் பதநீர் தரும். 


அதில் 25 கிலோ கருப்பட்டி, 16 கிலோ பனஞ்சீனியைப் பெறலாம். பனைபடு பொருட்கள் உணவாக மட்டுமல்ல மருந்தாகவும் பயன்படுகின்றன. இவ்வளவுக்கும் பனையை பயிரிட்டு, பேணி வளர்க்க வேண்டியதில்லை. நீர் பாய்ச்ச வேண்டியதில்லை. வெப்ப மண்டல நிலத்தில் தன்னியல்பாக வளரக்கூடியவை. பனை வளர்ந்து பலன் தர பல ஆண்டுகள் ஆகும். பனை உண்மையில் மரமல்ல, அது புல்லினத்தைச் சேர்ந்தது. இதை தொல்காப்பியமே உறுதிப்படுத்தி உள்ளது. 



கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் சுமார் 5 கோடி பனைகள் இருந்தன. மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகம். தற்போது அவற்றின் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகின்றன. வறட்சியை எதிர்கொண்டு வாழும் பனையும், பனை சார்ந்த தொழிலும் நலிந்து போனது குறித்து கவலைப்படும் இந்த நேரத்தில் இன்னொன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். தமிழகத்தில் நிலத்தடி நீர்மட்டம் 900 அடியிலிருந்து 1,300 அடிக்கு கீழிறங்கிப் போனதற்கு பனைகள் அருகிவருவதும் ஓர் முக்கிய காரணம். 



நமது முன்னோர், குளத்தைச் சுற்றிலும் பல ஆயிரம் பனைகளை நட்டு வைத்திருந்தனர். கரைகளில் பனைகள் உயிர் வேலியைப் போல் காட்சியளித்தது மட்டுமில்லாமல், இன்றியமையாத சூழலியல் பங்களிப்பையும் செய்துள்ளன. மற்ற மரங்களின் வேர்கள் பக்கவாட்டில் பரவும் வேளையில், பனையின் வேர்கள் செங்குத்தாக நிலத்தடி நீர்ப்பாதையைத் தேடிச்செல்லும். குழல் போன்ற தனது வேரால் தரையின் அடிபகுதியில் உள்ள நீரை மேல்தரைக்கு கொண்டுவந்து, நிலத்தடி நீர்மட்டத்தை நிலையாக வைத்திருந்ததுடன், நீரை ஊற்றாக கசியச் செய்து பல சதுர கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள வற்றாத நீர்நிலைகளை வளம் குன்றாமல் பாதுகாத்தன. 



பனைகளை வெட்டவெட்ட கிணறும் குளமும் வறண்டு நிலம் காய்ந்து, தரிசாகிவருவதை கண்கூடாகப் பார்க்கிறோம். எனவே தமிழக நீர்நிலை கரைகளில் பனை மரங்களை நட்டு வைத்தால், நமது நீர்நிலைகள் மீண்டும் உயிர்ப்பெறும். திருக்குறளில் கூறப்பட்ட இரண்டு மரங்களில் ஒன்று பனை. அதன் பயன்களை உணர்ந்துதான் வள்ளுவர் இயற்றிய குறள் இதோ- "தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக் கொள்வர் பயன்தெரி வார்" -இந்த உண்மையை மக்கள் உணர்ந்து, பனைகளை ேபணிக்காக்கவும், நட்டு வளர்க்கவும் வேண்டும் என்பதே சூழலியளாளர்கள் விடுக்கும் வேண்டுகோள்.