பிளஸ்-2 தேர்வில் அனைவரும் தேர்ச்சிக்கும், புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கும் மாணவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
புதிய நடைமுறை
கொரோனா தொற்று காரணமாக இந்த ஆண்டு தேர்வு எழுதாமலேயே பிளஸ்-2 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மருத்துவம் மற்றும் என்ஜினீயரிங் படிப்புக்கு மதிப்பெண் கட்டாயம் என்பதால் முதல் முறையாக தசம எண் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த மதிப்பெண்கள் திருப்தி இல்லை என்றால் தேர்வு நடத்தி மதிப்பெண் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. புதிய நடைமுறையில் தேர்ச்சி பெற்றுள்ள மாணவர்களில் சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது.
அதன் விவரம் வருமாறு:-
எதிர்பார்த்த மதிப்பெண்
நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வட்டம் சிவந்திபுரத்தைச் சேர்ந்த மாணவி எஸ்.சுகஸ்ரீ:-
பிளஸ்-2 வகுப்பு பாடத்தை பள்ளி சென்று படிக்க ஆர்வமாக இருந்தேன். ஆனால், கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் திறக்காத நிலையில், ஆன்லைன் மூலமே பாடங்களைப் படித்தோம். பாடம் எடுத்த ஆசிரியைகள், பொதுத்தேர்வு கண்டிப்பாக நடக்கும் என்று கூறியே எங்களுக்குப் பாடம் நடத்தினார்கள். நாங்களும் அதற்கு ஏற்ற வகையிலேயே படித்தோம். ஆனால் தேர்வு நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுவிட்டது. பரீட்சை எழுதாமலேயே நாங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறோம். நான் கம்யூட்டர் சயின்ஸ் பிரிவு படித்தேன். 489.22 மதிப்பெண்கள் பெற்றிருக்கிறேன். இது எதிர்பார்த்த மதிப்பெண்தான். எனது தோழிகளும் நல்ல மதிப்பெண் பெற்றுள்ளனர். அனைவருக்கும் மகிழ்ச்சியே. அடுத்து பி.சி.ஏ. அல்லது பி.பி.ஏ. படிக்க வேண்டும் என்பது எனது ஆசை.
வருத்தம்
சென்னை பட்டாளத்தைச் சேர்ந்த எம்.மோனிஷா:-
எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை என்பதுதான் பெரும்பாலான மாணவ-மாணவிகளின் கருத்தாக இருக்கிறது. இந்த மதிப்பெண்களை கொண்டு கவுன்சிலிங்கில் எப்படி விருப்பமான என்ஜினீயரிங் கல்லூரியை தேர்வு செய்வது என்று குழப்பமாக உள்ளது. அரசின் புதிய நடைமுறையால், படிக்காத மாணவர்களே நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். நன்றாகப் படிக்கும் நாங்கள் இப்போது வருத்தப்படும் நிலைக்கு வந்திருக்கிறோம். பிளஸ்-2 திருப்புதல் தேர்வுகளை அடிப்படையாக வைத்து மதிப்பெண்கள் வெளியிட்டிருந்தால் நாங்கள் இன்னும் அதிக மதிப்பெண் பெற்றிருக்க முடியும். அந்த தேர்வுகளில் இயற்பியல், வேதியியல், கணிதவியலில் 100 சதவீத மதிப்பெண்களை பெற்றிருந்தேன். எனது விருப்பம் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கவேண்டும் என்பதாகும். எப்படியாவது பொதுத்தேர்வு வைத்திருந்தால் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருக்க முடியும் என்பதே நன்கு படிக்கக்கூடிய பெரும்பாலான மாணவ-மாணவர்களின் கருத்து ஆகும். தற்போதைய மதிப்பெண்களை வருத்தத்துடன்தான் ஏற்க வேண்டியிருக்கிறது.
இரட்டையர்கள்
சென்னை கொரட்டூரைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள் எஸ்.நந்தகுமார்-எஸ்.நவீன்குமார்:-
தேர்வு நடக்காததால் பெரிய அளவில் மதிப்பெண்களை எதிர்பார்க்கவில்லை. ஆன்லைன் முறையில் ஆசிரியர்கள் நன்றாக நடத்திய பாடங்களை நல்ல முறையில் நாங்களும் படித்தோம். நேரில் சென்று தேர்வு எழுதியிருந்தால் நாங்கள் 2 பேருமே 90 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருப்போம். தற்போது கணக்கிடப்பட்ட நடைமுறையால் 80 சதவீத மதிப்பெண்களே எங்களால் பெறமுடிந்திருக்கிறது. இருந்தபோதிலும் அரசின் புதிய நடைமுறை திருப்திகரமாக உள்ளது. நன்றாக படிக்காதவர்கள்கூட நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கிறார்கள். நாங்கள் 2 பேரும் கணினி அறிவியல் என்ஜினீயரிங் படிக்க உள்ளோம்.
அதிக மதிப்பெண்கள்
சென்னை பெரவள்ளூர் பெரியார்நகரைச் சேர்ந்த பி.பி.ஸ்டீவ்லின் நிஷாந்தன்:-
எனக்கு இவ்வளவு மதிப்பெண் வரும் என்று நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. ஆனால் நான் எதிர்பார்த்ததை விடவும் அதிக மதிப்பெண்கள் வந்திருக்கிறது. பள்ளிக்குச் செல்லாமல் இவ்வளவு மதிப்பெண்கள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனாவால் 2 வருடம் வீணாகிவிட்டது. பள்ளிக்குச் சென்றிருந்தால் ஆசிரியர்கள் கற்பித்தலை புரிந்துகொண்டு இன்னும் நன்றாகப் படித்திருப்போம். நண்பர்களுடன் கலந்து ஆலோசித்திருப்போம். அதை தவறவிட்டுவிட்டோம். அடுத்து பி.டெக். பிளாஸ்டிக் என்ஜினீயரிங் அல்லது சுற்றுச்சூழல் என்ஜினீயரிங் படிக்க இருக்கிறேன்.
வரவேற்பு
சென்னையை அடுத்த தாம்பரத்தைச் சேர்ந்த தருண்:-
தமிழக அரசு அனைத்து பிளஸ்-2 மாணவர்களுக்கும் தேர்ச்சி என அறிவித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. கொரோனா பயம் காரணமாக தேர்வு எழுதும் மனப்பான்மையில் பெரும்பாலான மாணவர்கள் இல்லை. தமிழக அரசு அளித்துள்ள மதிப்பெண்கள் சராசரியாக இருந்ததால் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றாற்போல உள்ளது. தேர்வு வைத்திருந்தாலும் பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருப்பார்கள். இருந்தபோதிலும் அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற வைத்து சராசரி மதிப்பெண்களை அரசு வழங்கி இருப்பதை வரவேற்கிறேன்.
தேர்வு நடந்தால்....
சென்னை புழுதிவாக்கத்தைச் சேர்ந்த ஸ்வேதா ராஜேஷ்:-
கொரோனா காலமாக இருந்ததால் தேர்வுகள் நடக்காமல் தமிழக அரசு அறிவித்த புதிய நடைமுறையால் எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கவில்லை. ஆனாலும் கிடைத்துள்ள மதிப்பெண்கள் மகிழ்ச்சி அளிக்கிறது. கடுமையாக படித்து தயாராக இருந்தேன். தேர்வு நடந்திருந்தால் இதைவிட அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பேன். பெரிய நிறுவனங்களை நடத்தக்கூடிய நிர்வாக செயல் அதிகாரியாக வர வேண்டும் என்பதே என் ஆசை.
Tuesday, July 20, 2021
New
புதிய மதிப்பெண் கணக்கீட்டு முறைக்கு மாணவர்கள் வரவேற்பு
About BANUMATHI V
Templatesyard is a blogger resources site is a provider of high quality blogger template with premium looking layout and robust design. The main mission of templatesyard is to provide the best quality blogger templates.
Student News
Labels:
Public Exam,
Student News
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment