கொரோனா சூழலில் கிராமப்புற மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படாமல் இருக்க, கல்விக்கு என தனி 'டிவி சேனல்' துவக்குவது குறித்து பரிசீலிக்கும்படி மஹா., அரசுக்கு மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, தேசியவாத காங்.,- காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 'அனம்பிரேம்' என்ற தொண்டு நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது:பொருளாதார வசதி குறைந்த கிராமப்புற மாணவர்கள், 'ஆன்லைன்' வாயிலாக கல்வி கற்பதில் பல சங்கடங்களை சந்திக்கின்றனர். இணைய இணைப்பு சரிவர கிடைக்காமல் கல்வி பயில முடியாத நிலை உள்ளது. எனவே, கிராமப்புற மாணவர்கள் தடையின்றி கல்வி பயில, தனி டிவி சேனல் துவக்க, மஹா., அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு மும்பை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி திபங்கர் தத்தா தலைமையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அமர்வு பிறப்பித்த உத்தரவு:மொபைல் போன் வாங்க வசதியற்ற கிராமப்புற மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 'ஆன்லைன்' வாயிலாக கல்வி கற்பதில் சிரமம் உள்ளது.கிராமப்புறங்களில் மொபைல் போன் 'சிக்னல்' பிரச்னையும் உள்ளது. கிராமங்களில் வீட்டுக்கு வீடு 'டிவி' உள்ளதால், அதன் வாயிலாக கல்வி கற்பித்தால் மாணவர்கள் பயன் பெறுவர்.
எனவே, மஹாராஷ்டிர அரசு, கல்விக்கு தனி டிவி சேனல் துவங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.இது தொடர்பாக மத்திய அரசுடன் ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment