தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்...! - துளிர்கல்வி

Latest

Saturday, August 7, 2021

தெரியாததை தெரிந்து கொள்ளுங்கள்...!

பெரும்பாலான வெற்றியாளர்களிடம் உங் கள் வெற்றிக்கான ரகசியம் என்னவென்று கேட்டால் மிக எளிமையாக ‘எனக்கு எது தெரியாது, என எனக்கு தெரியும்’ என்பார்கள். ஆம் ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம் தான். 

நமக்கு எது தெரியும் என யோசிக்கும் நாம் பல நேரங்களில் நமக்கு எது தெரியாது என்பதில் கவனம் செலுத்துவதில்லை. உங்களுக்கு அவ்வளவாக அறிமுகமில்லாத அல்லது தெரியாத ஒரு விஷயத்தைப் பற்றி உங்கள் உயரதிகாரி கேட்கிறார் என வைத்துக்கொள்வோம். பெரும்பாலானோர் தனக்கு அந்த விஷயம் பற்றி தெரியாது என தயக்கம் இல்லாமல் தைரியமாக சொல்லிவிடுவதில்லை. காரணம் நமக்கு தெரியாத விஷயங்கள் எவை என்பது நமக்கே தெரிவதில்லை. 

அதனால் தான் பல்வேறு சந்தர்ப்பங்களில் குழம்பி இக்கட்டான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்கிறோம். இந்த இடத்தில்தான் வெற்றியாளர்களுக்கும் சாதாரணமானவர்களுக்குமான வித்தியாசம் இருக்கிறது. அவர்கள் தங்களுக்குத் தெரியாத ஒரு விஷயத்தை பற்றிய புரிதல் கொண்டிருக்கும் அதே நேரத்தில் அதன் மீது கவனம் செலுத்தி கற்றுக் கொள்ளவும் முயற்சி செய்கிறார்கள். 

அதாவது எந்த விஷயத்திலும் சாதாரணமாக பின் வாங்கி விடுவதில்லை. தங்கள் உழைப்பை முழு அர்ப்பணிப்புடன் தெரியாத விஷயங்களை தெரிந்து கொள்ள கொடுக்கிறார்கள். நமக்குத் தெரியாத விஷயங்கள் மீது கவனம் செலுத்தும்பொழுது அவற்றை கற்றுக் கொள்ள துவங்குகிறோம். இக்கட்டான தருணத்தில் யாரையாவது அந்த வேலைக்காக தேடுவதைத் தவிர்த்து, நாமே அதை செய்து முடிக்கலாம். 

உங்களைச் சுற்றி இருப்பவர்களைப் பொறுத்தவரையில் எதையும் கண்டு பின் வாங்கி விடாமல், அதைச் செய்து முடிக்கும் சூப்பர் ஹீரோவாகத் திகழ்வீர்கள். தெரியாத விஷயங்களை கற்றுக்கொள்ளும் பொழுது அடுத்தடுத்த நிலைகளுக்கு உங்களைத் தகுதி படுத்திக்கொள்ளலாம். தெரியாத விஷயங்களைப் பற்றி யோசிக்கும் அதே நேரம் நமக்கு தெரிந்த விஷயங்களையும் அசைபோட்டு பார்ப்போம். 

இது மனதுக்கும் புத்துணர்ச்சியை கொடுக்கும். நேரம் கிடைக்கும்பொழுது ஒரு பேப்பர், பேனா எடுத்துக் கொண்டு உங்களுடைய பலம், பலவீனத்தை எந்தவித சமரசமும் இல்லாமல் எழுதிப் பாருங்கள். அல்லது உங்களுக்கு நெருங்கிய நண்பரிடம் கேளுங்கள். ஆரம்பத்தில் இப்படி நம்முடைய பலத்தையும், பலவீனங்களையும் பற்றிய பட்டியல் தயாரிப்பது கொஞ்சம் கடினமாகத்தான் இருக்கும். ஆனால் நமக்குத் தெரியாத விஷயங்களைப் பற்றிய புரிதல் இல்லாமல் இருப்பதை விட அதைத் தெரிந்து கொண்டு செயல்படுவது நல்ல பலனைக் கொடுக்கும்.

No comments:

Post a Comment