மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது என்று பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தார்.
பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை டிபிஐ வளாகத்தில் நேற்று நடந்தது. இதில் பள்ளிக்கல்வி ஆணையர் கே.நந்தகுமார், தொடக்க கல்வி இயக்குநர் அறிவொளி மற்றும் இணை இயக்குநர்கள் கலந்துகொண்டனர்.
பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது:
பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழக்கமாக நடைபெறும் மாதாந்திர ஆய்வுக் கூட்டம்தான் இது. 1 - 8 வகுப்புகளுக்கு நவம்பர் 1-ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பது குறித்து இதில் ஆய்வு செய்யப்பட்டது. திட்டமிட்டபடி நவம்பர் 1-ம் தேதி 1 - 8 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்படும்.
பள்ளிகள் திறப்பு என்பது மாணவர்கள் பள்ளிக்கு தொடர்ந்துவருவதை பழக்கப்படுத்துவதற்குதான். அந்த வகையில், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு பெற்றோர் தைரியமூட்டும் வகையில் அறிவுரை வழங்க வேண்டும்.
தற்போதைய சூழலை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு காலாண்டு, அரையாண்டு தேர்வுகள் நடைபெறாது, அதற்கு பதில், பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் டிசம்பரில் சிறப்பு தேர்வு நடத்தப்படும். மேல்நிலை மாணவர்களுக்கு மார்ச்சில் பொதுத் தேர்வு நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment