நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் - ThulirKalvi

Latest

Search Here!

Thursday, December 30, 2021

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம்

நடப்பு கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகம் அரசு பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாணவர் சேர்க்கை எண்ணிக்கை குறைந்து கொண்டே வந்தது. 

இதனால் சில இடங்களில் பள்ளிகள் மூடப்படக்கூடிய அபாய நிலையும் ஏற்பட்டது. இதற்காக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு குரலையும் எழுப்பினர். அந்த நிலை அப்படியே மாறி அரசு பள்ளிகளில் கடந்த ஆண்டில் இருந்து மாணவர் சேர்க்கை அதிகரித்து வருவதை பார்க்க முடிகிறது. 

அந்தவகையில் கடந்த 2020-21-ம் கல்வியாண்டில் தமிழகத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் 46 லட்சத்து 50 ஆயிரத்து 671 மாணவ-மாணவிகள் படித்து வந்தனர். இந்தநிலையில் நடப்பு கல்வியாண்டில் தமிழகம் முழுவதும் உள்ள 1 முதல் 12-ம் வகுப்பு வரையிலான 37 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 53 லட்சத்து 24 ஆயிரத்து 9 என்ற எண்ணிக்கையில் மாணவ-மாணவிகள் இருக்கின்றனர். அதன்படி பார்க்கும்போது கடந்த ஆண்டை விட நடப்பு கல்வியாண்டில் 6 லட்சத்து 73 ஆயிரத்து 338 மாணவ-மாணவிகள் அதிகம் சேர்ந்துள்ளனர். 

இதில் 1-ம் வகுப்பில் மட்டும் 3 லட்சத்து 93 ஆயிரத்து 285 பேர் சேர்ந்து இருக்கின்றனர். கொரோனா தொற்றால் பெற்றோர் பலரின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, தனியார் கல்வி நிறுவனங்களில் கட்டணம் செலுத்துவதற்கான சூழல் இல்லாத நிலையில், அரசு பள்ளிகளை நாடி வந்தது ஒரு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. அதேபோல், தற்போது உயர்கல்வி நிறுவனங்களில் அரசு பள்ளி மாணவர்களுக்கு என்று தனி ஒதுக்கீடு வழங்கப்படுவதால், சிலர் அதற்காகவும் அரசு பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை சேர்ப்பதாகவும் கல்வித்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது.