அலுவலக வேலை மன அழுத்தத்தை உண்டாக்குகிறதா..? - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, December 23, 2023

அலுவலக வேலை மன அழுத்தத்தை உண்டாக்குகிறதா..?

வாரத்தின் ஆறு நாட்களும் வேலையில் மூழ்கி சோர்ந்து போகும் நபரா நீங்கள்? அப்படியென்றால் கொஞ்சம் ‘ஓய்வு’ எடுக்க பழகுங்கள். ஒரே வேலையில் ஈடுபட்டு வரும்போது, அந்த வேலை அப்படியே தடைபட்டு நின்று போக வாய்ப்புள்ளது. இது உங்கள் செயல்திறனை குறைப்பது மட்டுமின்றி, உங்களை அடுத்தகட்டத்துக்கு நகரவிடாமல் நீண்ட நாட்கள் அதே இடத்தில் முடக்கிவிடும். இதுபோன்ற பணிச் சூழலில் சிக்கியிருப்பவர்கள் அதிலிருந்து மீண்டுவர என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்பதை பார்ப்போம்... 

  1. சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள் தினமும் காலையில் உங்களுக்கு பிடித்த இடத்தில் சைக்கிள் பயணம் மேற்கொள்ளுங்கள். அது உங்கள் உடல் மற்றும் மனநிலையை மாற்றுவதாக அமையும். உங்கள் சைக்கிள் பயணங்களில், கவனம் சிதற வைக்கும் விஷயங்களுக்கு இடம் கொடுக்காமல் பயணத்தையும், நீங்கள் செல்லும் இடத்தின் சூழலையும் ரசிக்க பழகுங்கள். இதனை ஒரு வேலையாக பார்க்காதீர்கள். குறிப்பாக அலைபேசி தொந்தரவுகள் இன்றி இதை செய்ய பழகுங்கள். 

  2. 10 ஆயிரம் காலடி நடைபயணம் ஒரு நாளைக்கு நீங்கள் நடந்து செல்லும் தூரம் 10 ஆயிரம் காலடி (ஸ்டெப்ஸ்) என்ற அளவில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் என்பது 7.5 கிலோமீட்டர். அதற்காக ஒருவர் தினமும் 7.5 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும் என்பது இல்லை. உங்கள் வீட்டு மாடிக்கு ஏறுவது தொடங்கி, உங்கள் அலுவலகத்தில் காபி அருந்த கேண்டீனுக்கு செல்வது வரை அனைத்தையும் சேர்த்து இந்த அளவு நடந்தால் போதுமானதாக இருக்கும். 

  3. தினசரி ஒரு புகைப்படம் எடுங்கள் தினசரி உங்களுக்கு பிடித்த ஒரு விஷயத்தை அல்லது உங்களுக்கு பார்க்க அழகாக தோன்றும் ஒரு விஷயத்தை புகைப்படமாக பதிவு செய்யுங்கள். இதேபோல் 30 நாட் களும் புகைப்படம் எடுங்கள். உங்கள் மனநிலை முதல் நாளிலிருந்து தற்போது எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். உங்களை புதுமையாக சிந்திக்க வைக்க இந்த பழக்கம் மிகவும் உதவியாக இருக்கும். அது மிகப்பெரிய போட்டோகிராபியாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. செல்போன் புகைப்படமே போதுமானது. 

  4. தினமும் எழுதுங்கள் தினமும் எழுதுங்கள் என்று கூறியவுடன் உங் களுக்குள் ஒரு கேள்வி எழலாம். ‘நான் ஒரு கணினி பொறியாளர்... நான் எப்படி தினமும் எழுதுவது?' என்று. ஒரு நாளைக்கு உங்கள் வாழ்வில் நடக்கும் சுவாரசியமான விஷயங்களை அரைப்பக்க அளவில் இருந்து எழுத துவங்குங்கள். 100-வது நாள், 50 பக்க அளவு கொண்ட குறுநாவல் உங்கள் பெயரில் இடம் பெற்றிருக்கும். அத்துடன் புதுமையான விஷயங்களுக்கு நீங்கள் மாறிய விதம் புரியும். 

  5. கவனிக்க பழகுங்கள் உங்களை சுற்றியுள்ள சிறு சிறு விஷயங்களை கவனியுங்கள். நீங்கள் செய்யும் சில ஆக்கப்பூர்வமான விஷயங்களுக்கு உங்களை நீங்களே பாராட்டிக்கொள்ளுங்கள். வேலை செய்யும் நேரம் தவிர மற்ற‌ நேரங்களில் வேலையை பற்றிய‌ நினைவு இல்லாத உற்சாகமான விஷயங்களில் நாட்டம் செலுத்துங்கள். நண்பர்களுடன் சமூக வலை தளங்களில் உரையாடாமல் நேரில் உரையாட பழகுங்கள். மனதுக்கு நெருக்கமான நபருடன் அதிகமான நேரத்தை செலவிடுங்கள். இவற்றை நீங்கள் தொடர்ந்து செய்யும்போது, நீங்கள் நினைத்த புதுமை நபராக உங்களை நீங்களே தயார்படுத்தி இருப்பீர்கள். 

  எதை செய்யக் கூடாது? 

 1. வேலையை வீட்டுக்குள் அனுமதிக்காதீர்கள். 

 2. அலுவலக நேரம் தவிர அதிக நேரம் அலுவலகத்தில் இருக்காதீர்கள்.