பிளஸ்-2 கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வுகள் எளிதாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, March 12, 2024

பிளஸ்-2 கணக்கு பதிவியல், வேதியியல் தேர்வுகள் எளிதாக இருந்தது மாணவ-மாணவிகள் கருத்து


பிளஸ்-2 பொதுத்தேர்வு 3,302 தேர்வு மையங்களில் கடந்த மார்ச் 1-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அறிவியல் பாடத்தொகுதி மாணவர்களுக்கு வேதியியல் தேர்வும், கலைப்பிரிவு மாணவர்களுக்கு கணக்குப் பதிவியல் தேர்வும் நேற்று நடைபெற்றது. வேதியியல் தேர்வு குறித்து மாணவ-மாணவிகள் கூறுகையில், ‘வேதியியல் வினாத்தாளில் நன்கு தெரிந்த வினாக்களே அதிகளவில் இடம் பெற்றிருந்தன. 

குறிப்பாக ஒரு மதிப்பெண் கேள்விகள் எளிதாக இருந்தது. 80 முதல் 90 மதிப்பெண்களுக்கும் மேல் கிடைக்கும் என நம்புகிறோம்’ என்றனர். கணக்குப் பதிவியல் தேர்வில் மறைமுக வினாக்கள் எதுவும் கேட்கப்படவில்லை. பருவத் தேர்வுகளில் இடம்பெற்றிருந்த சில வினாக்களே மீண்டும் இடம் பெற்றிருந்தன. எனவே இந்த பாடத்தில் ‘சென்டம்' பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது என்று மாணவ-மாணவிகள் மகிழ்ச்சியுடன் கூறினார்கள். 

கணக்குப் பதிவியல், வேதியியல், புள்ளியியல் தேர்வுகளுக்கு தேர்வெழுத பதிவு செய்திருந்தவர்களில் 11 ஆயிரத்து 139 பள்ளி மாணவர்கள் மற்றும் 1,436 தனித்தேர்வர்கள் என மொத்தம் 12 ஆயிரத்து 575 பேர் வரவில்லை. தேர்வின்போது முறைகேடுகளில் ஈடுபட்டதாக திருவாரூர் மாவட்டத்தில் தனித்தேர்வர்கள் 7 பேர் சிக்கினார்கள் என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பிளஸ்-2 வகுப்பில் வெவ்வேறு பாடத்தொகுதிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அடுத்ததாக இயற்பியல், பொருளியல், கணினி தொழில்நுட்பம் ஆகிய தேர்வுகள் வருகிற 15-ந்தேதி (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.