நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது, இராகு காலம் மற்றும் சோதிடம் பார்க்கலாமா? - ThulirKalvi

Latest

Search Here!

Monday, August 31, 2020

நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது, இராகு காலம் மற்றும் சோதிடம் பார்க்கலாமா?

நம் முன்னேற்றத்திற்கு தடையாக இருப்பது எது, இராகு காலம் மற்றும் சோதிடம் பார்க்கலாமா?


பழக்க வழக்கம்


சகுனம் பார்ப்பது நமது நாட்டில் வழிவழி வரும் ஒரு வழக்கமாகும்.  ஒரு காரியத்தை செய்வதற்கு முன்னால் அல்லது ஏதோ ஒரு முக்கிய விஷயமாக ஓரிடத்திற்கு புறப்படுவதற்கு முன்னால் நல்ல அறிகுறிகள் தென்படுகின்றனவா என்று பார்ப்பது சகுனம் பார்த்தல் ஆகும்.

குறைகள் தென்பட்டால் மேற்கொள்ளும் முயற்சி தோல்வி அடையக் கூடும் என்று இன்றும் மக்கள் நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.  சகுனம் பார்ப்பது போன்றே ராகு காலம், குளிகை காலம், எமகண்டம் போன்றவற்றை பார்ப்பதும் ராகுகாலம் எமகண்டத்தில் ஒரு செயலை செய்ய முற்பட்டால் அந்த செயல் தோல்வியை தழுவுவது ஒரு விபரீதமான பலன்களையும் எதிர்நோக்க வேண்டிவரும் என்பது நமது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை. 

ஜோதிடம் பார்ப்பது மற்றொரு வகை


 நாம் எந்த செயலை செய்ய முற்படுகிறோமோ,  அந்த செயல் வெற்றி அடைவதற்கான நல்லகாலம் அப்பொழுது நிலவுகிறதா?  என்பதையோ அல்லது எந்த சமயத்தில் எந்த வேலையை செய்தால் சிறப்பாக அமையும் என்றும் முன்னதாகவே தெரிந்து கொள்வதற்கு ஜோதிட சாத்திரம் பயன்படும் என்று நமது மக்கள் நம்பி வருகிறார்கள்.  

வாழ்க்கையில் நமக்கு ஏற்படுகிற கஷ்ட நஷ்டங்களுக்கு என்ன காரணம் என்று தெரிந்து கொள்ளவும் நாம் இருக்கும் உயர்ந்த நிலை எத்தனை காலத்திற்கு இது நிலவும் என்பதை அறிந்து கொள்ளவும் சோதிட சாத்திரத்தில் நம் மக்கள் பொதுவாக பயன்படுத்துகின்றனர்.  சகுனம் பார்ப்பது அர்த்தமற்ற நடைமுறை என்றோ,  ராகுகாலம் பார்ப்பது மூட நம்பிக்கை என்றோ,  சோதிடம் பார்ப்பது மூட நம்பிக்கை என்றோ,  சோதிடம் பார்ப்பது அறிவுக்கு புறம்பானது என்றோ நிச்சயமாக நாம் கூற மாட்டோம்.

நுணுக்கமான ஏதோ உண்மைநிலை அந்தப் பழக்கங்களில் ஒன்றாக இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.  ஆனால் மேற்சொன்ன சாதனங்களை நமது பெலவீனத்துக்கான அடையாளமாக பயன்படுத்தக் கூடாது என்பதுதான் நமது கோரிக்கை. 

நாளும் கோளும் பார்த்தல்


நாம் எந்த பிரச்சினை தொடர்பான முயற்சியில் ஈடுபட்டாலும் நாளும் கோளும் பார்க்க வேண்டும் என்று வற்புறுத்திய நமது முன்னோர்கள்,  நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்று ஒரு பழமொழியும் கூறியிருக்கிறார்கள்.  

இது போன்று "விதி வலிது அதை மாற்ற லரிது"  என்று சொன்ன நம் முன்னோர் "விதியை மதியால் வெல்லலாம்" என்று கூறி போனார்கள்.  

எந்த விஷயத்துக்கும் விதிவிலக்கு உண்டு என்பதை நமது முன்னோர்களை அனுமதித்தனர் என்பதற்கான சான்றுகள் தான் இவை.  

சகுணம் சோதிடம் போன்ற சாதனைகளை அடிப்படையாக வைத்து நமது வாழ்க்கை திட்டங்களை நிர்ணயிப்பதற்கு ஓர் எல்லை இருக்கவேண்டும். வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்திலும் இவற்றையே முன்வைத்து இவையே குழப்பத்துக்கும் தொடக்கமாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.  

வாழ்க்கையில் நாம் பெறக்கூடிய உயர்வு நிலை என்பது கிடைக்கும் சந்தர்ப்பங்களை எந்த அளவுக்கு துரிதமாகவும் சாமர்த்தியமாகவும் பயன்படுத்திக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்துதான். 


கிடைக்கும் வாய்ப்பை நழுவவிடலாமா?


ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நமது வாழ்க்கையின் எதிர்காலத்தில் மிகவும் உயர்ந்த ஒரு நிலைக்கு கிடைக்கும் கடைக்கால் அமைக்க கூடிய பொறுப்பு ஒன்றை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டி இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம்.  அந்த நேரத்தில் அந்தப் பொறுப்பினை நாம் ஏற்றுக் கொள்ளத் தவறினால் அது நமது கையை விட்டு நழுவி வேறு ஒருவருக்கு கிடைத்து விடக் கூடும் என்பது நிலைமை. 

நாம் பொறுப்பு ஏற்க வேண்டிய நேரம் ராகுகாலம் ஆக இருக்கிறது.  ராகு காலத்தில் எந்தவொரு பணியிலும் ஈடுபட கூடாது . எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது என்பது நமது நம்பிக்கை.  இந்த நம்பிக்கையின் அடிப்படையில் அந்த பொறுப்பை ஏற்க நாம் தவறினால்,  தயங்கினால் நமது எதிர்கால முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்பு ஒன்று நழுவி விடும்.

இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ராகு காலத்தின் தீமையை எண்ணி குழப்பமடைவதை விட  நாளும் கோளும் நலிந்தோர்க்கு இல்லை என்ற பழமொழியை சிந்தையில் கொண்டு செயல்படுவது சிறந்த நிலையாகும். 

ராகு காலம் பார்க்கலாமா?


நண்பர் ஒருவர் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.  அந்த நிறுவனம் வட இந்திய கம்பெனி ஒன்றின் கிளை நிறுவனங்கள் உள்ள ஒரு பெரிய நிறுவனம்.  அந்நிறுவனத்தின் பம்பாய் கிளை ஒன்றின் பொறுப்பு ஒன்றை ஏற்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார்.  

பதவி மிகவும் உயர்ந்தது.  ஊதியமும் மிக அதிகம்.  வேறு வசதிகளும் நிறைய உண்டு.  நிர்வாகத்தின் அவசர நிலை காரணமாக ஒரு குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு சென்று பதவியேற்பது மிகவும் அவசியமாக இருந்தது.  அவர் புறப்பட்டு செல்லும் நேரத்தை ஒத்தி போடுங்கள் என்பதற்கு நிறுவனத்தினரின் நிலை. 

உயர்ந்த பதவி கிடைத்த திருப்தி தான்.  ஆனால் ஒரு விஷயத்தில் அவருக்கு பெரிய மனக்குழப்பம்.  அவர் என்று புறப்பட வேண்டுமோ அன்று அவர் பிரயாணம் செய்ய வேண்டிய ரயல் ராகு காலத்தில் புறப்படுகிறது.  ராகு காலத்தில் புறப்படும் ரயில் பிரயாணம் செய்தால் ரயிலில் ஏதாவது விபத்துக்குள்ளாகி விடக்கூடும் என்று நண்பர் அஞ்சி குழம்பினார்.  வீட்டைவிட்டு முன்னதாக கிளம்பி விட்டால் போதும் வண்டி எப்பொது புறப்பட்டாலும் பரவாயில்லை என்று நண்பர்கள் யோசனை கூறினர். 

நாம் முன்னால் புறப்பட்டு விடலாம்.  ஆனால் ரயில் ராகு காலத்தில் புறப்படுகிறது.  ராகு காலத்தில் புறப்படும் ரயிலுக்கு ஏதாவது விபத்து ஏற்பட்டால் அதன் விளைவே நானும் அல்லவா அனுபவிக்க வேண்டிவரும் என்று கூறி நண்பர் புறப்பட மறுத்துவிட்டார்.  வேறு வழியில்லாமல் நண்பருக்கு அளிக்கப்பட்ட பதவி மற்றொரு நண்பருக்கு அளிக்கப்பட,  அவர் ராகு  காலத்தில் புறப்பட்டு சென்ற ரயிலில் பயணம் செய்து பம்பாய் அடைந்து பொறுப்பை ஏற்றார்.

இந்த நிகழ்ச்சி 10 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.  ராகுகாலத்தில் புறப்பட்ட நண்பருக்கு சிறு இடையூறும் ஏற்படவில்லை. தமது பதவி பொறுப்பை மிகவும் மகிழ்ச்சியுடனும் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார். 

இதேபோன்று வியாபாரம் போன்ற சிலபல தொழில் தொழில் முயற்சிகளில் இறங்குவதற்கு சிலர் காலநேரம் பார்த்து குழப்பம் அடைவார்கள்.  

சோதிடர்கள்


ஒரு தொழிலை - வியாபாரத்தை என்றே வைத்துக் கொள்வோமே.  ஆரம்பித்து நடத்தும் சூழ்நிலை அமைந்து இருக்கும்.  அந்த நேரத்தில் வியாபாரத்தைத் தொடங்கினால் தொழில் நன்கு வேர் பிடித்து நிலைத்து வளர்ந்து பெருகும் என்பது நிச்சயமாகத் தெரிகிறது.  வியாபாரத்தை துவக்க எண்ணுபவர் தமது ஜாதகத்தை ஒரு சோதிடரின் கையில் கொடுத்து வியாபாரம் தொடங்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்பார். 

சோதிடர்கள் கணக்குகள் எல்லாம் போட்டு பார்த்து உங்கள் கால பலன் சரியில்லை. காலமும் இப்போது தொழில் தொடங்கினால் நஷ்டம் ஏற்படும் என்று கூறுவார்.  

உடனே வியாபாரத்தைத் தொடங்க நினைப்பவர் தமது முயற்சியைக் கைவிட்டு ஓய்ர்ந்து விடுவார்.  அவர் கூறியது பொய் என்று சாதிக்க இங்கே நாம் வரவில்லை.  நமது கால பயனை தெரிந்து கொண்ட பிறகு செய்ய வேண்டிய தொழிலை மிகவும் எச்சரிக்கையுடனம்  விழைப்புடனம் செய்ய முயற்சி மேற்கொள்ளலாம்.  கிடைக்கும் வாய்ப்பை தவறவிடக்கூடாது.  

சோதிட சாஸ்திரங்கள் காலத்திற்கும் இன்றைய கால சூழ் நிலைக்கும் இடையே எவ்வளவோ வித்தியாசம் இருக்கிறது.

அறிவியல் முன்னேற்றம்


விஞ்ஞான அறிவும்,  விஞ்ஞான சாதனங்களும் பெருகி அவற்றையெல்லாம் புறக்கணித்து வாழவே முடியாது என்றுள்ள இன்றைய சூழ்நிலையில் சோதிடத்தை முழுக்க முழுக்க அப்படியே பின்பற்றுவது சிரமமே.  

அவற்றை எல்லாம் ஒரேடியாக புறக்கணிக்க தேவை இல்லை என்றாலும் அவற்றை சற்று நீக்குப் போக்குடன் செயற்படுத்த முனைய வேண்டும். 

முடிவுரை


சோதிடம் போன்ற சாதனங்களை நமது பலமாக பயன்படுத்த வேண்டுமே தவிர பலவீனர்களாக பயன்படுத்தக்கூடாது.  

சோதிடம் போன்றவற்றை மட்டுமல்ல வாழ்க்கையின் எந்த அம்சத்தையும் பலமாக பயன்படுத்த வேண்டுமே தவிர பலவீனங்களாக பயன்படுத்தக் கூடாது.