எலுமிச்சங்காயளவு பொன் - அறிவுச் சிறுகதை - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, September 9, 2020

எலுமிச்சங்காயளவு பொன் - அறிவுச் சிறுகதை

எலுமிச்சங்காயளவு பொன் - அறிவுச் சிறுகதை


மன்னர் கிருஷ்ணதேவராயருக்கு வழக்கமாக ஒரு சவரத் தொழிலாளி சவரம் செய்து வந்தான்.  நாள்தோறும் அவன் அரண்மனைக்கு வந்து இராயருக்கு சவரம் செய்வான்.

அரசருக்கு அவன் சவரம் செய்து வந்ததால் அவனுக்கு நல்ல சன்மானம் கிடைத்தது.  தான் சம்பாதித்த பொருளை எல்லாம் ஒன்று சேர்த்து அதைத் தங்கமாக மாற்றி வைத்துக் கொண்டான்.  அது எலுமிச்சங்காய் அளவு இருந்தது.  எலுமிச்சங்காய் அளவு உள்ள பொன்னை பத்திரமாக தன் அடைப்பத்தினுள் வைத்திருந்தான்.  

சவரத் தொழிலாளி ஒரு நாள் அவன் சவரம் செய்யும் போது " நம் நாட்டில் குடி மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார் ராயர்.  

"எல்லாரும் சவுக்கியமா சந்தோஷமாக இருக்கிறார்கள்"   "தங்கள் ஆட்சியில் குறைந்தது எலுமிச்சங்காய் அளவு பொன்னாவது ஒவ்வொருவரும் வைத்திருக்கிறார்கள் என்றான் சவரத் தொழிலாளி. 

சவரத் தொழிலாளி கூறியதை கேட்டதும் இராயருக்கு வியப்பு ஏற்பட்டது. எல்லாரிடமும் எலுமிச்சங்காய் அளவு பொருள் இருக்கிறதா என்று வியப்புடன் கேட்டார் ராயர்.  

"ஆம் அரசே"  எலுமிச்சங்காய் அளவு பொன் இலாதவர் எவரும் தங்கள் ஆட்சியில் இல்லை என்றான் சவரத் தொழிலாளி.  அவன் சென்ற பிறகு அவருடைய அமைச்சர் அப்பாஜி அங்கே வந்தார்.  

அப்பாஜியிடம் சவரத் தொழிலாளி கூறியதை கூறினார் ராயர்.  நாளைய தினம் வந்தால் இன்று போலவே அவனிடம் கேளுங்கள்,  என்ன பதில் சொல்லுவான் என்று பார்ப்போம் என்று கூறினார் அப்பாஜி.  அன்று அப்பாஜிக்கு  சவரம் செய்வதற்காக அதே சவரத் தொழிலாளி வந்தான். அவன் சவரம் செய்து கொண்டிருக்கும் போது அவனுக்கு ஏதோ ஒரு வேலைசொல்லி வெளியே அனுப்பிவிட்டார் அப்பாஜி.  

சவரத் தொழிலாளி அப்பால் சென்றதும் அவனுடைய பெட்டியை குடைந்தார் அப்பாஜி.  அதற்குள் ஒரு சிறிய துணியில் எலுமிச்சங்காய் அளவு பொன்னிருந்தது.  அந்த பொன்னை எடுத்துக்கொண்டு அதற்கு பதில் ஒரு கல்லை வைத்து முன்போலவே பெட்டிக்குள் அடைத்து விட்டார் அப்பாஜி.  சவரத் தொழிலாளி அப்பாஜி சொன்ன வேலையை முடித்து விட்டு வந்தான். அவனுக்கு தன்னுடைய தங்கம் மாற்றப்பட்டது தெரியாது. கூலி வாங்கி கொண்டு போய்விட்டான்.

மறுநாள் முகத்தைத் தொங்கப் போட்டுக் கொண்டு அரண்மனைக்கு வந்தான் சவரத்தொழிலாளி.  வழக்கமாக மகிழ்ச்சியுடன் காணப்படும் சவரத் தொழிலாளி அன்று சோகமாக அமர்ந்திருப்பதை அவர் கண்டார்.  அவன் சவரம் செய்யும் போது முன்தினம் கேட்டது போலவே நம் நாட்டில் குடி மக்கள் எப்படி இருக்கிறார்கள் என்று கேட்டார்.  

"அதை ஏன் கேட்கிறீர்கள்?  "ஊரில் ஒரே திருட்டு புரட்டு ஆகிவிட்டது,  "எவனாவது ஒருவன் கஷ்டப்பட்டு ஒரு எலுமிச்சை அளவு பொன் சேர்த்து வைத்திருந்தால் அதை கூட திருடிக் கொண்டு போய் விடுவார்கள் என்றான் சவரத் தொழிலாளி. 

அப்போது அவனிடம் அந்த அப்பாஜி  "உன்னை வைத்துக்கொண்டே உலகத்தை எடை போடாதே"  உன்னிடம் எலுமிச்சங்காய் அளவு கொண்டிருந்தபோது எல்லாரிடமும் எலுமிச்சை அளவு பொன் இருந்ததாக கூறினாய். 

உன்னுடைய தங்கம் காணாமல் போய்விட்ட போதோ,  ஊரில் திருட்டு மிகுதி ஆகிவிட்டது என்கிறாய்.  நான் தான் உன் தங்கத்தை எடுத்தேன்.  இனிமேல் இந்த மாதிரி எல்லாம் பேசாதே என்று சொல்லி அவனிடம் அவனுடைய தங்கத்தை திருப்பிக் கொடுத்தார் அப்பாஜி.