இரட்டை முகக்கவசம்: தெரிந்துகொள்ள வேண்டியவை! - ThulirKalvi

Latest

Search Here!

Tuesday, April 27, 2021

இரட்டை முகக்கவசம்: தெரிந்துகொள்ள வேண்டியவை!

நாட்டில் கரோனா இரண்டாவது அலை மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து ஆக்சிஜன் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. 



ஒரு சில பகுதிகளில் கரோனா தடுப்பூசிக்கும் தட்டுப்பாடு இருந்து வருகிறது. இந்நிலையில் முகக்கவசங்களே கரோனா தொற்றிலிருந்து காக்கும் ஒரே ஆயுதமாக இருக்கின்றன. கடந்த ஆண்டு கரோனா வைரஸ் தொற்று அறிமுகமான நாளில் இருந்தே முகக்கவசம் அணிவதன் அவசியத்தை சுகாதார அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன. 


மேலும், எந்த முகக்கவசங்களை பயன்படுத்த வேண்டும், எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது 'ஒரு முகக்கவசம்' இன்றி 'இரண்டு முகக்கவசங்கள்' அணிவதுதான் பாதுகாப்பானது என்று நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தனது ஆய்வின் மூலமாக கூறியுள்ளது. கரோனா தொற்று ஏற்படாமல் இருக்க கண்டிப்பாக இரட்டை முகக்கவசம் அணிய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. 


முகக்கவசம் காற்றில் உள்ள நீர்த்திவலைகளிலிருந்து நம்மை பாதுகாக்கும் முகக்கவசங்களில் பல வகைகள் உள்ளன. இதில் வால்வு பொருத்திய முகக்கவசங்களை அணிய வேண்டாம். சர்ஜிக்கல் முகக்கவசம், துணி முகக்கவசம், என்95 முகக்கவசங்களை அணியலாம். 


முகக்கவசம் சுவாசிப்பதற்கு இடையூறு இல்லாதவாறு அதேநேரத்தில் சற்று இறுக்கமாக இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும். மூக்குப் பகுதியில் இறுக்கமாகவும், வாய் பகுதிக்கு அருகே சற்று தளர்வாகவும், பின்னர் தாடை பகுதியில் இறுக்கமாகவும் இருக்க வேண்டும். சர்ஜிக்கல் முகக்கவசத்தை பயன்படுத்தும்போது முகக்கவசத்தில் முடிச்சு போட்டு பயன்படுத்துவது அதிக பாதுகாப்பை உறுதி செய்யும் என்று கூறப்பட்டுள்ளது. 


இரட்டை முகக்கவசம் இரட்டை முகக்கவசத்திற்குஒரு சர்ஜிக்கல் முகக்கவசத்தையும் ஒரு துணி முகக்கவசத்தையும் பயன்படுத்த வேண்டும். முதலில் சர்ஜிக்கல் முகக்கவசத்தையும், அதன்மேலாக ஒரு துணி முகக்கவசத்தையும் அணிய வேண்டும். என்95 முகக்கவசம் அணிந்தால் வேறு முகக்கவசத்தை அணியத் தேவையில்லை. இரண்டு சர்ஜிக்கல் முகக்கவசத்தையோ, இரண்டு துணி முகக்கவசத்தையோ ஒன்றாக பயன்படுத்தக்கூடாது. 

எவ்வளவு பாதுகாப்பானது? 

 முடிச்சு போடப்படாத சர்ஜிக்கல் முகக்கவசம் - 56.1% 
 துணி முகக்கவசம் - 51.4% 
 முடிச்சு போடப்பட்ட சர்ஜிக்கல் முகக்கவசம் - 77% 
 என்95 முகக்கவசம் - 95% 
 இரட்டை முகக்கவசம் - 85.4%