போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை: அரசு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம் - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, April 14, 2021

போக்குவரத்து கழகம், மின்சார வாரியம், பொதுப்பணித்துறை: அரசு பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரம்

பொதுமக்களுடன் அதிக தொடர்பில் உள்ள மாநகர போக்குவரத்து கழகம், குடிநீர் வாரியம், மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறை ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. 

அரசு ஊழியர்களுக்கு தடுப்பூசி தமிழகத்தில் கொரேனா தொற்று மீண்டும் அதிகரிப்பதை தடுப்பதற்காக அரசு ஊழியர்கள் உட்பட 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தரப்பினரும் தடுப்பூசி எடுத்து கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தி உள்ளார். அதனடிப்படையில் பொதுமக்களுடன் அதிக தொடர்பி்ல் இருக்கும் மாநகர போக்குவரத்து கழகம், குடிநீர் வாரியம், மின்சார வாரியம் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்காக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட தலைமை மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது. பொதுமக்களும் தற்போது ஆர்வமுடன் சென்று கொரோனா தடுப்பு ஊசியை போட்டு கொள்கின்றனர். 

 பொதுப்பணித்துறை

  இதுகுறித்து பொதுப்பணித்துறை முதன்மை தலைமை பொறியாளர் (கட்டிடம்) அலுவலக சார்பில் திருச்சி, மதுரை மண்டல தலைமைப் பொறியாளர்கள், அனைத்து கண்காணிப்புப் பொறியாளர்கள், அனைத்து செயற்பொறியாளார்கள் உள்ளிட்ட அனைத்து பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று 2-வது அலை பரவிக்கொண்டு வருவதால் நோய்த்தொற்று மேலும் பரவாமல் இருக்க தாமதமின்றி 45 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பொதுப்பணித்துறை (கட்டிடம்) அலுவலர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். நோய்தொற்று மேலும் பரவாமல் இருக்க அலுவலர்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 


இந்த நடைமுறையை வட்டம் மற்றும் கோட்ட அலுவலகங்களில் பணிபுரியும் உயர் அலுவலர்கள் தங்கள் கீழ் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட அலுவலர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டதை கண்காணித்து அதனை உறுதிப்படுத்தி பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

குடிநீர் வாரியம் இதுகுறித்து சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் ஹரிஹரன் கூறியதாவது:- குடிநீர் வாரிய பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் குடிநீர் வினியோகம், கழிவுநீர் அகற்றம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளில் ஈடுபடுவதற்காக எப்போதும் சமுதாயத்துடன் தொடர்பில் இருப்பதால் தடுப்பூசி போட்டு கோள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 


இதுதொடர்பாக மாநகராட்சியின் உதவியுடன் மருத்துவ குழுக்கள் வரவழைக்கப்பட்டு பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதில் பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுகிறது. அத்துடன் பொதுமக்களுக்கும் தடுப்பூசி போட்டு கொள்ளவும் விழிப்புணர்வும் அளித்து வருகிறோம். அத்துடன் முககவசம் மற்றும் கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் பணியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. சமூக இடைவெளியையும் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட உள்ளது. 

கொரோனா பரவல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். மாநகர போக்குவரத்து கழகம் சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் (பொறுப்பு) இளங்கோவன் கூறியதாவது:- போக்குவரத்து கழக தொழிலாளர்கள் எப்போதும் பயணிகளுடன் தொடர்ப்பில் இருப்பதால் கண்டிப்பாக தடுப்பூசி போட்டு கொள்ள உத்தரவிடப்பட்டு இருந்தது. அதனடிப்படையில் சென்னையில் உள்ள 33 பணிமனைகளில் 21 ஆயிரத்து 256 பேர் பணியாற்றுகின்றனர். 

இதில் 11 ஆயிரத்து 501 பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள். தற்போது வரை ஆயிரத்து 47 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. இதில் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் 1,510 பேராகும். மீதம் உள்ள பணிமனைகளிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுதவிர பஸ்களில் பயணிக்கும் பயணிகளும் முககவசம் அணிந்து வர வேண்டும், கைகளை சுத்தம் செய்ய கிருமி நாசினியும் வழங்கப்பட்டு வருகிறது. நின்று கொண்டு பயணிக்கக் கூடாது என்பதற்காக அலுவலக நேரம் உட்பட அனைத்து நேரங்களிலும் கூடுதலான பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதனால் அமர்ந்து கொண்டு தான் பயணிகள் பயணிக்கின்றனர். நோய் பரவல் தடுப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். 

 மின்சார வாரியம் இதுகுறித்து தமிழ்நாடு மின்சார வாரிய பொறியாளர் கழக பொதுச்செயலாளர் ஜெயந்தி கூறியதாவது:- பொதுமக்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு மின்சாரம் வழங்கும் அத்தியாவசியப் பணிகளில் மின்சார வாரிய பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். பொதுமக்களுடன் அதிக தொடர்பில் இருப்பதால் கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக அனைத்து பொறியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போட வேண்டும் என்று பொறியாளர் கழகம் மற்றும் ஒரு சில சங்கங்கள் நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தது. 

இதனை ஏற்று, நிர்வாகம் தடுப்பூசி போடும் முகாமை ஏற்பாடு செய்தது. அதன்படி சென்னையை பொறுத்தவரையில் தலைமை அலுவலகத்தில் முதல் கட்டமாக 478 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டு உள்ளது. தொடர்ந்து அனைத்து ஊழியர்களும் போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் மூடுக்கி விடப்பட்டு உள்ளது. முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது போன்ற கொரோனா பரவல் தடுப்பு பணியில் தீவிரமாக ஈடுபடவும் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.