9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, July 28, 2021

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பள்ளிகளை திறக்க ஆலோசனை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகளை திறக்கலாமா? என்று ஆலோசிப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.

‘நீட்’ தேர்வில் விலக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சென்னை முகப்பேரில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

அரசு பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல. பெருமையின் அடையாளமாக இருக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வழிகாட்டுதலின்படி, வெகு விரைவில் அப்படி ஒரு அடையாளத்தை அடைவோம். சி.எஸ்.ஆர். திட்டம் மூலம் தனியார் நிறுவனங்கள் தங்களால் முடிந்த உதவியை அரசு பள்ளிகளுக்கு வழங்கலாம். ‘நீட்' தேர்வில் இருந்து விலக்கு பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடாக இருக்கிறது. கருணாநிதி, ஜெயலலிதா இருந்தபோது இந்த தேர்வு கொண்டு வரப்படவில்லை. அதன்பிறகுதான் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதை எப்படி தடுக்க வேண்டும்? என்ற முயற்சியில் ஈடுபட்டு இருக்கிறோம். 

கண்டிப்பாக நம் நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவது இல்லை. சட்டரீதியான போராட்டத்தை முதல்-அமைச்சர் எடுத்து கொண்டு இருக்கிறார். பள்ளிகளை திறக்கலாமா? பஞ்சாப், ஒடிசா, மத்திய பிரதேச மாநிலங்களில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுவும் கட்டாயம் இல்லை. வருகிறவர்கள் வரலாம் என்று தெரிவித்து இருக்கிறார்கள். 

அதனால் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாகத்தான் இருக்கிறது. முதலில் பெற்றோருக்கு தங்களுடைய குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்புவதற்கு தைரியம் வேண்டும். 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையிலான மாணவர்களுக்காவது பள்ளிகளை திறக்கலாமா? என்ற ஆலோசனையில் இருந்து வருகிறோம். மற்ற மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டது குறித்து முதல்-அமைச்சரிடம் எடுத்து சொல்லி, அதன்பிறகு அவர் என்ன அறிவுறுத்தல் கொடுக்கிறாரோ? அதன் அடிப்படையில் பள்ளிகள் திறக்கப்படும். 

 உரிய நடவடிக்கை எடுக்கப்படும் பொருளாதார ரீதியாக பலர் அரசு பள்ளியை நாடி வந்திருக்கிறார்கள். புதிய அரசாங்கம் நல்ல திட்டங்களை அரசு பள்ளிகளில் கொண்டு வரும் என்ற நம்பிக்கையிலும் சிலர் சேருகிறார்கள். இவர்களை தக்கவைத்து கொள்வதற்காக அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக, அனைத்து மாவட்டங்களிலும் ஆய்வு நடத்தி இருக்கிறோம். அந்த ஆய்வு முடிவில் ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதை செய்வோம். பள்ளிகள் தொடர்பாக நில அபகரிப்பு யார் செய்திருந்தாலும், அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகள் அதிக கட்டணம் வசூலிப்பது தொடர்பாக வரும் புகார்களின் அடிப்படையில் அந்த பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வி துறை தரப்பில் இருந்து எச்சரிக்கை விடுக்கிறோம். அதையும் மீறி செய்தால், கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 

ஆசிரியர் நியமனம் தொடர்பாக வெளியிடப்பட்டு இருக்கும் அரசாணைகளில் முரண்பாடுகள் இருக்கிறது. அதையெல்லாம் சீர்செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறோம். ஒரு ஆசிரியர் பணிக்கு சேருவதற்கு ஒரு கொள்கையை கொண்டு வரவும் திட்டமிட்டு உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.