தினம் ஒரு தகவல் உடலில் உப்பு அதிகமானால்...? - ThulirKalvi

Latest

Search Here!

Wednesday, July 28, 2021

தினம் ஒரு தகவல் உடலில் உப்பு அதிகமானால்...?

உயர் ரத்த அழுத்த நோய்க்கு முதல் எதிரி உப்புதான். ஒருவருக்கு நாளொன்றுக்கு அதிகபட்சமாக ஒன்றரை தேக்கரண்டி உப்பு போதுமானது. ஆனால், தென் இந்தியாவிலோ தினசரி 20 கிராம் வரை உப்பை உணவில் சேர்த்துக்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 

சமையல் உப்பு என்பது 40 சதவீதம் சோடியத்தாலும் 60 சதவீதம் குளோரைடாலும் ஆனது. நாளொன்றுக்கு நமக்குத் தேவையான சோடியம் அளவு 4 மி.கி. மட்டுமே. ஒரு தேக்கரண்டி சமையல் உப்பில் 2.3 மி.கி. சோடியம் உள்ளது. நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு 4 மி.கி. அளவை தாண்டினால், அது சிறுநீரகத்தை பாதிக்கும். ஏற்கனவே சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு, இன்னும் குறைவாகவே சோடியம் தேவைப்படும். 

உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் சிறுநீரகத்துக்கு அதிகப்பங்கு உண்டு. ‘ரெனின்-ஆஞ்சியோடென்சின் - ஆல்டோஸ்டீரான் அமைப்பு’ என்று ஒரு அமைப்பு நம் உடலில் உள்ளது. இதுதான் ரத்த அழுத்தத்தை எப்போதும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்கிறது. இதில் ரெனின், ஆஞ்சியோடென்சினை சிறுநீரகம் உற்பத்தி செய்கிறது. இந்த இரண்டும் உடலில் ரத்தக் குழாய்களை சுருங்கி விரியச்செய்கின்றன. 

 இவை சரியாக சுரந்தால், ரத்தக் குழாய்களும் சரியாகவே சுருங்கி விரியும். அதிகமாகச் சுரந்தால், ரத்தக் குழாய்கள் ஒரேயடியாகச் சுருங்கிவிடும். இப்படிச் சுருங்கிப் போன ரத்தக் குழாயில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். உப்பு உடலில் அதிகமானால், அதில் உள்ள சோடியம் ரெனின், ஆஞ்சியோடென்சின் சுரப்பதை அதிகப்படுத்திவிடும். இதனால் ரத்தக்குழாய்கள் ஒரேயடியாக சுருங்கி ரத்த அழுத்தத்தை அதிகரித்துவிடும். அடுத்த காரணம், உப்பு அதிகரிக்கும்போது, அதிலுள்ள அதீத சோடியம் உடல் செல்களிலுள்ள தண்ணீரை ரத்த ஓட்டத்துக்கு கொண்டுவந்துவிடும். 

இதனால் ரத்தத்தில் தண்ணீர் அளவு அதிகமாகி, அதில் அழுத்தம் அதிகரித்துவிடும். இதன் விளைவாலும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இப்படி இன்னும் சில வழிகளில் உடலில் உப்பு அதிகமானால் ரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. உப்பு நிறைந்த உணவு பொருட்களான ஊறுகாய், கருவாடு, அப்பளம். உப்புக்கண்டம், வடாம், சிப்ஸ், சாஸ், பாப்கார்ன், புளித்த மோர், பாலாடைக்கட்டி, சேவு, சீவல், சாக்லேட், முந்திரிப் பருப்பு போன்ற நொறுக்குத்தீனிகளை அதிக அளவில் எடுத்துக்கொள்ளக்கூடாது.. 

பதப்படுத்தப்பட்ட உணவு, பாக்கெட் உணவு, துரித உணவு, செயற்கை வண்ணம் சேர்க்கப்பட்ட உணவில் உப்பு கூடுதலாகவே இருக்கும். நமக்கு சோடியம் தேவைதான். ஆனால், நமக்குத் தேவையான சோடியம் இயற்கை காய்கறிகளில் இருந்தே கிடைத்துவிடும். தனியாக உப்பு எனும் பெயரில் சோடியம் தேவையில்லை. தினமும் பால் குடிக்கலாம். இதில் கால்சியம் உள்ளது. ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, வாழைப்பழம், சோயாபீன்ஸ், உளுந்து, கிழங்குகள், முட்டைக்கோஸ், காலிபிளவர், பருப்புக் கீரை, முருங்கைக் கீரை, இளநீர், மீன் உணவு ஆகியவற்றில் பொட்டாசியம், மக்னீசியம் சத்துகள் அதிக அளவில் உள்ளன. இவற்றையும் தினசரி உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள். உயர் ரத்தஅழுத்தம் உள்ளவர்கள் தினமும் 1.8 மி.கி. சோடியத்தை குறைத்தால் 6 மி.மீ. மெர்குரி என்ற அளவுக்கு ரத்த அழுத்தம் குறையும். இதை மறந்துவிடாதீர்கள்.