தினக் கூலியாக இருந்து வேலையை இழந்த, ஒடிசாவைச் சேர்ந்த ஒருவர், 'யு டியூப்' சமூக வலைதளம் வாயிலாக லட்சக்கணக்கில் சம்பாதிக்கிறார்.
ஒடிசா மாநிலம் சம்பல்புர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஐசக் முண்டா.தினக் கூலித் தொழிலாளியான இவர், கடந்தாண்டு பொது முடக்கத்தால் வருமானம் இல்லாமல் திண்டாடினார். அந்த நேரத்தில் சமூக வலைதளங்களில், உணவுப் பொருட்கள் தயாரிப்பது குறித்த, 'வீடியோ' ஒன்றை பார்த்தார்.
இதையடுத்து சாப்பிடுவது தொடர்பான வீடியோ ஒன்றை யு டியூபில் வெளியிட்டார்.
தட்டில் சாதம், சாம்பார், மிளகாய், தக்காளி வைத்து, அதை எப்படி சாப்பிட வேண்டும் என அவர் கூறும் அந்த வீடியோவை, ஐந்து லட்சம் பேர் பார்த்துள்ளனர்.அதன்பின் உணவு வகைகளை சமைப்பது, சாப்பிடுவது தொடர்பாக பல வீடியோக்களை அவர் வெளியிடத் துவங்கினார். யு டியூப்பில் அவரை ஏழு லட்சம் பேர் பின்தொடர்கின்றனர்.
கடந்தாண்டு மார்ச்சில் துவங்கிய இந்த முயற்சிக்கு பலன் கிடைத்து உள்ளது. கடந்தாண்டு, ஆகஸ்டில், யு டியூப் நிறுவனத்திடம் இருந்து 5 லட்சம் ரூபாய் வந்தது.
சொந்த வீடு கட்டி, கடன்களை அடைத்த அவருக்கு தற்போது வருமானம் கொட்டுகிறது.
''பணத்துக்காக மட்டும் இதைச் செய்யவில்லை. எங்களைப் போன்ற மலைவாழ் பகுதியினர் வீடுகளில் என்னென்ன உணவு சமைக்கப்படுகிறது என்பதையும், எங்கள் வாழ்க்கை முறையை மக்களுக்கு தெரிவிக்கும் வாய்ப்பாகவும் இதை பயன்படுத்தினேன்,'' என, முண்டா குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment