1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு சுழற்சி முறையில் நடத்த கல்வித்துறை உத்தரவு - ThulirKalvi

Latest

Search Here!

Saturday, October 30, 2021

1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு சுழற்சி முறையில் நடத்த கல்வித்துறை உத்தரவு



1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் நாளை மறுதினம் திறப்பு சுழற்சி முறையில் நடத்த கல்வித்துறை உத்தரவு 19 மாதங்களுக்கு பிறகு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 

சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு கல்வித்துறை அறிவுறுத்தி இருக்கிறது. நாளை மறுதினம் பள்ளிகள் திறப்பு கொரோனா நோய்த் தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு (2020) மார்ச் மாதம் இறுதியில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டது. தொடர்ந்து நோய்த் தொற்றின் தாக்கம் தீவிரமாக இருந்ததால் பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டே கிடந்தன. 

இந்த நிலையில் நோய் பாதிப்பு சற்று குறைந்ததை தொடர்ந்து, கடந்த செப்டம்பர் மாதம் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும் முக கவசம், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை அவ்வப்போது சுத்தம் செய்தல் போன்ற அறிவுரைகளை பின்பற்ற கல்வித்துறை அறிவுறுத்தியது. 

 அதன்படி, 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு நடைபெற்று வரும் நிலையில், 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கும் பள்ளிகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு, வகுப்புகள் தொடங்க அரசு அனுமதி வழங்கியது. அந்த வகையில் வருகிற 1-ந் தேதி (நாளை மறுதினம்) முதல் அவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட உள்ளன. 

இதற்கான ஆயத்த பணிகளில் அந்தந்த பள்ளிகள் ஈடுபட்டு வருகின்றன. சுழற்சி முறையில் வகுப்புகள் இந்த நிலையில் நாளை மறுதினம் (திங்கட்கிழமை) முதல் பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அங்கு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கல்வித்துறை அறிவித்து இருக்கிறது. அதில் மாணவ-மாணவிகள் முக கவசம் அணிவதோடு, பள்ளிகளில் சமூக இடைவெளியை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

 மேலும், பள்ளிகளின் இடவசதிக்கு ஏற்ப மாணவ-மாணவிகளை சுழற்சி முறையில் வகுப்புகளுக்கு அனுமதிக்க வேண்டும். எந்த வகுப்புகளை எந்த நாட்களில் அனுமதிக்க வேண்டும் என்பதை அந்தந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். ஒரு வகுப்பறையில் 20 மாணவ-மாணவிகள் மட்டுமே அமரும் வகையில் இடவசதிகள் செய்யப்பட வேண்டும். மாணவ-மாணவிகள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டியது இல்லை. 

பெற்றோரின் விருப்பத்தின் அடிப்படையில் அவர்களை அனுப்பலாம். ஆன்லைன் வழி கல்வி தேவைப்படுவோர், தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்பது உள்பட ஏற்கனவே பின்பற்றப்பட்டு வரும் வழிகாட்டு நெறிமுறைகளை தான் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 19 மாதங்களுக்கு பிறகு... அதற்கேற்றாற்போல், பள்ளிகள் மாணவ-மாணவிகளை வகுப்புகளுக்கு வரவழைக்க ஏதுவான திட்டங்களை வகுத்து, அதனை பெற்றோரின் வாட்ஸ்-அப் எண்ணுக்கு அனுப்பி வைத்து வருகின்றனர். 

பெற்றோரும் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கான ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருவதையும் பார்க்க முடிகிறது. 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு கடந்த 19 மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.