கலை, என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்? உயர்கல்வித் துறை தகவல் - ThulirKalvi

Latest

Search Here!

Friday, April 28, 2023

கலை, என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்? உயர்கல்வித் துறை தகவல்

கலை, என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை எப்போது தொடங்கும்? உயர்கல்வித் துறை தகவல் 


கலை மற்றும் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப்பதிவு எப்போது தொடங்கும்? என்பது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன. 

பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு 

பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 13-ந்தேதி தொடங்கி, கடந்த 3-ந்தேதியுடன் நிறைவு பெற்றது. விடைத்தாள் திருத்தும் பணிகள் முடிந்து, மதிப்பெண்கள் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, தேர்வு முடிவு அடுத்த மாதம் (மே) 5-ந்தேதி வெளியிடப்படும் என்று முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அடுத்த மாதம் 8-ந்தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு முடிவு வெளியானதும், மதிப்பெண் பெற்ற மாணவர்கள் அதற்கேற்றால்போல், உயர்கல்வி படிப்புகளில் சேருவதற்கு ஆயத்தமாவார்கள். அந்த வகையில் பிளஸ்-2 படித்து முடிக்கும் மாணவ-மாணவிகளில் பெரும்பாலானோரின் தேர்வாக கலை மற்றும் அறிவியல் கல்லூரி படிப்புகள் கடந்த சில ஆண்டுகளாக இருந்து வருகின்றன. 

கலை கல்லூரிகள் 

 இந்த நிலையில் 2023-24-ம் கல்வியாண்டில் 163 அரசு கலைக் கல்லூரிகள், 136 அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் 580-க்கும் மேற்பட்ட தனியார் கல்லூரிகளில் உள்ள 3 லட்சத்துக்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் சார்ந்த படிப்புகளில் சேருவதற்கான விண்ணப்பப்பதிவு எப்போது தொடங்கும்? என்ற எதிர்பார்ப்பு மாணவ-மாணவிகள் மத்தியில் இருந்து வருகிறது. அதன்படி, தனியார் கல்லூரிகளில் அடுத்த மாதம் (மே) 1-ந்தேதியில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 9-ந்தேதியில் இருந்தும் ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக உயர்கல்வித் துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

என்ஜினீயரிங் படிப்புகள் 

இதேபோல், என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கான கலந்தாய்வை நடத்தி வரும் தொழில்நுட்ப கல்வி இயக்ககமும் அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தயாராக இருக்கிறது என்றும், அமைச்சர் அறிவிக்கும் தேதியில் விண்ணப்பப்பதிவு தொடங்கும் என்றும் தொழில்நுட்ப கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். அனேகமாக அதற்கான விண்ணப்பப்பதிவு பிளஸ்-2 பொதுத் தேர்வு முடிவு வெளியான அன்றைய தினத்தில் (8-ந்தேதியில்) இருந்தே தொடங்குவதற்கான வாய்ப்புகள் அதிகளவில் இருப்பதாக சொல்லப்படுகிறது.