ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு - ThulirKalvi

Latest

Search Here!

Friday, April 28, 2023

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு அடுத்த மாதம் (மே) 8-ந்தேதி தொடங்க இருக்கிறது. இதற்கு விருப்பமுள்ளவர்கள் வரும் 1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வு 

ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்தவகையில் கடந்த 2021-22-ம் ஆண்டுக்கான கலந்தாய்வு சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக 2022-23-ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்த அறிவிப்பை கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது. இந்த கலந்தாய்வினை கல்வித்தகவல் மேலாண்மை அமைப்பு என்று அழைக்கப்படும் ‘எமிஸ்' இணையதளம் வாயிலாக நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, மாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள விருப்பம் தெரிவிக்கும் ஆசிரியர்கள் எமிஸ் இணையதளத்தில் தங்களுடைய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கு முன்பு பொது மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க தற்போது பணிபுரியும் பள்ளியில் ஓராண்டு பணியை நிறைவு செய்திருக்க வேண்டும் என்ற நிபந்தனை இருந்தது. ஆனால் இந்த ஆண்டு அந்த நிபந்தனையை கடைப்பிடிக்க தேவையில்லை என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. 


1-ந்தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும் 

ஆசிரியர்களின் விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர்கள் ஒப்புதலுடன் முதன்மைக்கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அதன்படி, ஆசிரியர்கள் அடுத்த மாதம் 1-ந்தேதி மாலை 5 மணிக்குள் இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யவேண்டும் என்றும், மாறுதல் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்து கலந்தாய்வு நடைபெறும் நாளில் வருகை புரியாமலோ, தாமதமாக வருகை புரிந்தாலோ கலந்தாய்வில் கலந்து கொள்ளமுடியாது என்றும், விண்ணப்பங்களில் தவறுகள் ஏதேனும் இருப்பது கண்டறியப்பட்டால், தக்க ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.  

அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு முதன்மைக்கல்வி அலுவலர்களின் மூலமாகவும், தொடக்கக்கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாவட்டக்கல்வி அலுவலர்களின் வாயிலாகவும் நடத்தப்பட உள்ளது. 

 கலந்தாய்வு எப்போது? 

விண்ணப்பித்தவர்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் அடுத்த மாதம் 5-ந்தேதி வெளியிடப்பட இருக்கிறது. அதனைத்தொடர்ந்து, 8-ந்தேதியில் இருந்து கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. முதல் நாளில் மலைச்சுழற்சி மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது. அதன் தொடர்ச்சியாக தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. அதன்படி, அடுத்த மாதம் 31-ந்தேதி வரை கலந்தாய்வை நடத்த கல்வித்துறை உத்தரவிட்டு இருக்கிறது.