மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் இராணி மேரி கல்லூரியில் 105-வது பட்டமளிப்பு விழாவில் 1,523 மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்
இன்று (21.07.2025) சென்னை. இராணி மேரி கல்லூரியில் மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் அவர்கள் 105-வது பட்டமளிப்பு விழாவில் 1,523 மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
இப்பட்டமளிப்பு விழாவில் மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர்
அவர்கள் பேசியதாவது:-
நூற்றாண்டை கடந்து மாணவியர்களுக்கான ஒரு சிறந்த கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறன். உலகப் போர் தொடங்கிய 1914ஆம் ஆண்டு மதராஸ் மாகாண கவர்னர் பெண்ட்லண்ட் பிரபுவின் ஒப்புதலுடன் மேடம் டீ வா ஹே அவர்களை முதல்வராகக் கொண்டு 37 மாணவியர்களுடன் கேப்பர் இல்லம் எனும் கட்டிடத்தில் இக்கல்லூரி தொடங்கப்பட்டது. இன்று இக்கல்லூரியில் 6,000-த்திற்கும் மேற்பட்ட மாணவியர்கள் பயில்கின்றனர்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பொற்கால ஆட்சியில் இக்கல்லூரிக்கு ரூ.42 கோடியில் நவீன வசதிகளுடன் கூடிய விடுதிக் கட்டடம் கட்டி, அவர் கையாலேயே திறக்கப்பட்டது. மாற்றுத் திறனாளி மாணவியர்கள் பயன்பாட்டிற்கு ரூ.4 கோடியில் சாய்வுதளம் (Ramp) அமைப்பு, மின்தூக்கி வசதி மற்றும் சுமார் ரூ.2 கோடியில் தாவரவியல் பாடப்பிரிவுக் கட்டடங்கள் போன்றவைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இன்று இவ்விழாவில் 1.252 மாணவியர்கள் இளநிலை பட்டத்தினையும். 237 மாணவியர்கள் முதுநிலை பட்டத்தினையும். 34 மாணவியர்கள் M.Phil பட்டத்தினையும் என மொத்தம் 1,523 மாணவியர்கள் பட்டம் பெறுகின்றனர். இதில் 550 மாணவியர்கள் முதல் தலைமுறை பட்டதாரிகள். இத்தகைய பின்புலம் இருக்கும் மாணவியர்கள் சிறந்த முறையில் தேர்ச்சி பெற்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும், 100 மாணவியர்கள் பதக்கம் பெற்று விளங்குவது வெகு சிறப்பு. அவர்களிலும் மாற்றுத்திறனாளி மாணவியர்கள் 19 பேர் பட்டம் பெறுவது தனிச் சிறப்பு.
இக்கல்லூரியில் தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களில் பயன்பெற்ற முதல் தலைமுறை பட்டதாரி 55 மாணவியர்கள். நான் முதல்வன் திட்டத்தில் பயன்பெற்ற மாணவியர்கள் 4,263 மற்றும் புதுமைப்பெண் திட்டத்தில் 1,824 மாணவியர்கள் பயன்பெறுகின்றனர். இந்தி, சமஸ்கிருதத்தை உள்ளடக்கிய மும்மொழிக் கொள்கையே புதிய கல்விக் கொள்கை. இது தமிழ்நாடு அரசின் இரு மொழிக் கொள்கைக்கு முரணானது. தற்போதுள்ள 10 + 2 + 3 என்ற நடைமுறை மாணாக்கர்கள் எளிதாக பட்டப் படிப்புக்குச் செல்லும் முறை. இந்த கல்வி முறையை மாற்றக் கூடாதென்பதே தமிழ்நாட்டின் நிலைப்பாடாகும். இதை எதிர்ப்பதில் இந்தியாவிலேயே இன்று தமிழ்நாடு மட்டும்தான் முன்னணியில் நிற்கிறது.
நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உயர்கல்வியில் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல்களுக்குச் சிறிதும் அஞ்சாமல், போராடி வருகிறார். மாணாக்கர்கள் அரசின் "நான் முதல்வன்" போன்ற திட்டங்களைப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 'நான் முதல்வன் திட்டம் மாணாக்கர்களுக்கு எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையைத் தரும். அதைத்தான் நம் முதல்வர் அவர்கள் மாணாக்கர்களிடம் விதைத்திட அறிவுறுத்தியுள்ளார்.
இன்று பட்டங்களை பெறும் மாணவியர்களாகிய நீங்கள் இதுவரை ஒரு மாணவி என்ற நிலையில் படிக்கும் இடம் சார்ந்தும் உங்களின் பெற்றோரைச் சார்ந்தும் இருந்திருப்பீர்கள். ஆனால், இன்று முதல் உங்கள் ஒவ்வொருவரையும் தனித் தனி மனிதராக இந்தச் சமூகம் பார்க்கப்போகின்றது. இந்தச் சமுதாயத்தில் எந்த உயரத்தை எட்ட வேண்டுமோ அதை உங்களின் செயல்களால் நீங்கள் பெற்றுக் கொள்கிற நேரம் வந்துவிட்டது. அதற்கான அடையாளம் தான் இன்று நீங்கள் பெறும் பட்டம். எதையும் சாதிக்க முடியும் என்ற நம்பிக்கையோடு பயணம் செய்யுங்கள். நிறைந்த புகழையும், வெற்றிகளையும், மகிழ்ச்சியையும் நீங்கள் பெற வேண்டுமென்று மனதார வாழ்த்துகிறேன்.
இவ்வாறு மாண்புமிகு உயர்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் திரு. த. வேலு. கல்லூரி கல்வி ஆணையர் திருமதி எ. சுந்தரவல்லி, இ.ஆ.ப. கல்லூரி முதல்வர் முனைவர் பா. உமாமகேஸ்வரி, பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment