நேர்மையான உள்ளம். உண்மைச் சம்பவம்
கதையாய்...கனவாய்...
நான் சைக்கிளை ஸ்டாண்ட்டிட்டு விட்டு அந்தத் தோட்டத்திற்குள் சென்ற போதே கண்களில் பட்டது...
நெல் களத்தில் கொட்டிப் பரப்பி விடப்பட்டு...அதில் தானே காலிட்டு உலர்த்திக் கொண்டிருந்தார் அந்தத் தோட்டத்துக்காரர்.
அந்த நெல் மூடைகளை நான் விலை பேசி இரண்டுமூன்று நாட்கள் ஆகி விட்டது...
நெல் மூடைகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தான் விலை பேசியிருந்தேன்...சற்று ஈரப்பதமானது தான்...
விலையும் அதற்கேற்றவாறே சற்றுக் குறைவு தான்.
உடனே, எடை போட்டு மில்லுக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும்...
ஆனால் வண்டிக்காரரின் தாமதத்தால் இப்படி ஒரு நிலை...
எனக்கு முன்னரே அங்கு வந்திருந்த வண்டிக்காரர் மாடுகளை அவிழ்த்து விட்டு வண்டியின் அருகில் நின்று கொண்டிருந்தார்.
அவருக்கு முன்பே ஏதாவது தெரிந்திருக்கும் என நினைத்து அவரிடம்
'என்ன விஷயம். .அந்த நெல் நமதா?
'என்றேன் வண்டிக்காரரிடம்...
'தெரியவில்லை..
.'என்றார்.
'நெல்...இனி நமக்கு இல்லையோ...'என்ற எண்ணம் மேலிட...
நெல் உலர்த்திக் கொண்டிருக்கும் அந்த தோட்டத்துக்காரர் அருகில் சென்றேன்.
தனது சற்று உயரமான கருப்புத் தொப்பியையும் வெள்ளை முழுக்கைச் சட்டையையும் அவிழ்த்து களத்து வீட்டின் திண்ணையில் வைத்திருந்தார்...
கைவைத்து தைக்கப்பட்ட பனியனும் வெள்ளை வேட்டியோடும் நெல்லில் நின்றிருந்த அவருக்கு எழுபது வயதிற்கு மேல் இருக்கும்...
நல்ல உயரம்...
கருத்த மனிதர்...
புருவங்களும் மீசை தாடியும் தூய வெள்ளை...
அவர் உள்ளத்தையும்...
உடைகளையும் போலவே...
தீட்சண்யமும் கருணையும் மிக்க பார்வை...
'வாத்தா...'என்று வரவேற்று...
என்னைத் திண்ணையில் அமரச் சொன்னார்.
வெயிலேறிக் கொண்டிருந்தது மணி அப்போது ஒன்பது...பத்து இருக்கும்.
திண்ணையில் வந்து அமர்ந்தவரிடம்,
'என்ன நெல்லைக் காய வைக்கிறீர்களே..
பெரியத்தா...'என்றேன்.
( நெல்லை இருப்புக்கு வைப்பவர்கள் தான் நன்றாகக் காய வைப்பது வழக்கம் )
ஆமாம் தம்பி 'நீ வர லேட்டானது.. அதுதான் களத்தில் கொட்டச் சொன்னேன்.. ஈரப்பதமான நெல் சூடேறிக் கெட்டு விடுமே...'என்றார்.
நான் வண்டிக்காரரால் ஆன தாமதத்தை அந்தப் பெரியரிவரிடம் விவரமாகச் சொன்னேன்.
'வண்டிக்காரர் வந்து விட்டாரா...? என்று கேட்டார்.
ஆமாம். அதோ அங்கே வண்டியுடன் நிற்கிறார் என்றேன்.
உடனே தனது வேலையாட்களை அழைப்பித்து, வெயிலில் பரப்பி வைக்கப்பட்டிருந்த அந்த நெல்லை அள்ளச் சொல்லி எடைபோட்டுக் கொடுத்தார்...
ஒரு ரூபாய் கூட விலையைக் கூட்டாமல்...
நான் பேசியபடியே...கொடுத்தார்.
( சாதாரணமாக நெல்லை ஒரு மணிநேரம் களத்தில் கொட்டி உலர்த்தி அள்ளினால்...மூடைக்கு இரண்டு மூன்று கிலோ குறைவுபடி வெகுஇயல்பு...
அப்போதெல்லாம் உயர்ரக நெல்லின் விலையே 75 கிலோ கொண்ட ஒரு மூடை...150 லிருந்து 200 ரூபாய்கள் தான். )
விலை பேசிய நெல்லைக் காய வைத்து எடை போட்டுக் கொடுத்த அப்படியான நேர்மையையும் தாண்டி
புனிதமான...நிஜமான பெரிய மனிதர்கள் அப்போதே ஊருக்கு ஓரிருவர் தான் இருந்தார்கள்.
அமைதியாக வாழ்ந்து மறைந்த அந்த நிஜமான மனிதர்களை நினைக்கும் போது இப்போதும் நெஞ்சு கனத்துத் தான் போகிறது...!
இது கதையல்ல...
சுமார் முப்பது வருடங்களுக்கு முன்பு நமது தமிழ்நாட்டில் திண்டுக்கல் அருகே வேல்வார் கோட்டை என்ற கிராமத்தில் நடந்த உண்மை நிகழ்வு இது.
நேர்மை என்பது சிறந்த கொள்கை;
ஆனால் இந்த கொள்கையைவார்த்தையில் மட்டும்
வைத்திருக்கும் நபர்
நேர்மையான நபர் அல்ல. நாம் நேர்மையாக இருப்பதை நமது செயல்கள் மூலம் நிரூபிப்போம். நேர்மையாக வாழ்வோம்.
No comments:
Post a Comment