கொரோனா நிவாரணம் முதல் தவணை தொகை ரூ.2000 வழங்குதல் தொடக்கம் குறித்து செய்தி வெளியீடு (முழு விவரம்) - துளிர்கல்வி

Latest

Monday, May 10, 2021

கொரோனா நிவாரணம் முதல் தவணை தொகை ரூ.2000 வழங்குதல் தொடக்கம் குறித்து செய்தி வெளியீடு (முழு விவரம்)

செய்தி வெளியீடு எண்: 23 நாள்:10.05.2021 

செய்தி வெளியீடு 

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், 2.07 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா பாதிப்பு நிவாரண உதவித் தொகை முதல் தவணையாக 2 ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சி, இன்று (10-5-2021) நண்பகல் 12-00 மணியளவில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. 


மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள், தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள சில தவிர்க்க இயலாத கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள மக்களைப் பாதுகாத்து, ஆறுதல் அளிக்கும் வகையில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் அன்று ரூபாய் 4,000 வழங்கப்படும் என்று தேர்தல் அறிக்கையில் உறுதியளித்திருந்தார். 

இத்தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு, சுமார் 2,07,66,950 குடும்ப அட்டைதாரர்களுக்கு 4,153.39 கோடி ரூபாய் செலவில் 2,000 ரூபாய் வீதம் நிவாரண தொகை முதல் தவணையாக மே மாதத்திலேயே வழங்கும் ஆணையில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 7.5.2021 அன்று பதவியேற்றவுடன் கையொப்பமிட்டார்கள். 

அதன் தொடர்ச்சியாக, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் இன்று (10.5.2021) தலைமைச் செயலகத்தில், அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் கொரோனா நிவாரணத் தொகைக்கான முதல் தவணையான 2000 ரூபாய் தொகையை வழங்கிடும் அடையாளமாக, 7 அரிசி குடும்ப அட்டைதாரர் குடும்பங்களுக்கு 2000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கி தொடங்கி வைத்தார். இத்தொகை நியாயவிலைக் கடைகள் மூலமாக 15.5.2021 அன்று முதல் காலை 8.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை விநியோகிக்கப்படும். இதற்கான முன்னேற்பாடாக 10.5.2021 முதல் 12.5.2021 வரை 3 நாட்கள் நியாயவிலைக் கடை பணியாளர்களால் வீடுதோறும் சென்று விநியோகிக்கப்படும் டோக்கன்களில், குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியைப் பின்பற்றி நிவாரணத் தொகையை பெற்றுக் கொள்ளலாம். 

இந்த நிகழ்ச்சியில், மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு. இ. பெரியசாமி, மாண்புமிகு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு. அர. சக்கரபாணி, தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, இ.ஆ.ப., கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. தயானந்த் கட்டாரியா, இ.ஆ.ப., தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குநர் திருமதி எம். சுதாதேவி, இ.ஆ.ப., உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் திரு. சஜ்ஜன் 2  சிங் ஆர். சவான், இ.ஆ.ப., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் முனைவர் இல. சுப்பிரமணியன், இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

 #### 
வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 




No comments:

Post a Comment