G.O. NO 37 - பொது விநியோகத் திட்டம் - கொரோனா வைரஸ் நோய் தொற்று – நிவாரண உதவிகள் - மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குதல் - ஆணைகள் - துளிர்கல்வி

Latest

Monday, May 10, 2021

G.O. NO 37 - பொது விநியோகத் திட்டம் - கொரோனா வைரஸ் நோய் தொற்று – நிவாரண உதவிகள் - மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குதல் - ஆணைகள்

பொது விநியோகத் திட்டம் - கொரோனா வைரஸ் நோய் தொற்று – நிவாரண உதவிகள் - மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்குதல் - ஆணைகள் வெளியிடப்படுகின்றன. 


கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் (எப்1) துறை 

அரசாணை (நிலை) எண்.37 நாள் : 07.05.2021 
பிலவ வருடம், சித்திரை-24 
திருவள்ளுவர் ஆண்டு 2052 
படிக்க: அரசாணை (நிலை) எண்.364, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, நாள் 03.05.2021. 

ஆணை: 

தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை தேர்தல்-2021 தொடர்பாக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், கொரோனா அச்சுறுத்தல் மீண்டும் திரும்பி உள்ள நிலையில், கட்டுப்பாடுகளும் மக்களின் துயரங்களும் தொடர்வதால் தமிழக மக்களின் துன்பங்களைப் போக்குவதற்கு, அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த திருநாள் முதல் ரூ.4000/- வழங்கப்படும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உறுதியளித்துள்ளார்கள். 


2. தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா நோய்ப் பரவலைக் கருத்தில் கொண்டும், நோய்ப் பரவலைத் தடுக்க மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் பரிந்துரைத்துள்ள ஒரு சில செயல்பாடுகளுக்கான கட்டுப்பாடுகளை கருத்தில் கொண்டும், தமிழ்நாட்டில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த, தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் 06.05.2021 காலை 4.00 மணி முதல் 20.05.2021 காலை 4.00 மணி வரையிலான காலத்திற்கு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்து மேலே படிக்கப்பட்ட அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. 

3. கொரோனா நோய் தொற்றின் காரணமாகவும், பல்வேறு கட்டுப்பாடுகளின் காரணமாகவும் பொதுமக்களின் இயல்பு நிலை வாழ்க்கை வெகுவா பாதிக்கப்பட்டுள்ளதுடன் பொது மக்களின் வாழ்வாதாரங்களும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது

4. தமிழ்நாட்டில் தற்போது 2,07,66,950 அரிசி குடும்ப அட்டைகள் நடைமுறையில் உள்ளன. மே 2021 மாதத்தில் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்கினால் அரசுக்கு ரூ.4153.39 கோடி செலவினம் ஏற்படும். 

5. மேற்கூறிய சூழ்நிலையில், கொரோனா நோய் தொற்றின் காரணமாக பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை குறைக்கும் வகையிலும், பெருந்தொற்று நேரத்தில் பொதுமக்களின் வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், ரூ.4153.39 கோடி செலவில், மே 2021 மாதத்தில் 2,07,66,950 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.2000/- நிவாரணத் தொகையினை முதல் தவணையாக வழங்க அரசு ஆணையிடுகிறது. 

6. மேலே பத்தி-5-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினம் பின்வரும் கணக்குத் தலைப்பின்கீழ் பற்று வைக்கப்படவேண்டும்: 

2245 இயற்கைச் சீற்றங்கள் குறித்த துயர் தணிப்பு 
80 பொது 
800 ஏனைய செலவு - மாநிலச் செலவினங்கள் 
AJ கோவிட்-19 காரணமாக ஊரடங்கை சமாளிக்க வாழ்வாதார ஆதரவு- அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பண உதவி 
309 உதவித் தொகை 
09 ஏனையவை 

(IFHRMS DP Code 2245 80 800 AJ 30909) 

7. மேலே பத்தி-5-இல் ஒப்பளிக்கப்பட்ட செலவினத்தை எதிர்வரும் 2021-2022ஆம் ஆண்டிற்கான திருத்திய வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் சேர்த்து சட்டமன்றத்தின் ஒப்புதல் பெறுவதை எதிர்நோக்கி, இத்தொகையினை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பின்வரும் வைப்பீட்டுக் கணக்கின்கீழ் வரவு வைப்பதற்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்ட நடைமுறையின்படி சரிகட்டும் பட்டி தயாரிப்பதற்கு ஆணையாளர், வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சென்னை-5 அவர்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகிறது. 

K வைப்பீடுகளும் முன்பணங்களும் 
(b) வட்டி பெறாத வைப்பீடுகள் 
8443 00 உரிமையியல் வைப்பீடுகள் 
800 ஏனைய வைப்பீடுகள் 
BJ தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் வைப்பீடுகள்
801 வரவுகள்
02 வட்டி பெறாதவை
IFHRMS DP CODE 8443 00 800 BJ 80102 


8. மேலும், பயனாளிகளுக்கு ரூ.2000/- நிவாரணத் தொகை வழங்கப்பட்டதற்கான பயனீட்டு சான்றிதழினை நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் அவர்களிடமிருந்து பெற்று அரசுக்கு சமர்ப்பிக்குமாறு ஆணையாளர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னை-5 அவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. 

9. இவ்வாணை நிதித்துறையின் அ.சா.எண்.47/DS(Budget)/2021, நாள் 07.05.2021 மற்றும் கூடுதல் நிதியொதுக்கப் பேரேட்டு எண்.57 (ஐம்பத்தேழு)-இல் பெற்ற ஒத்திசைவுடன் வெளியிடப்படுகிறது. 

(ஆளுநரின் ஆணைப்படி) 
தயானந்த் கட்டாரியா, அரசு கூடுதல் தலைமைச் செயலாளர். 

பெறுநர் 

கூடுதல் தலைமைச் செயலாளர்/ஆணையாளர், வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சென்னை-5. ஆணையாளர், 
உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, சென்னை-5. கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர், சென்னை-10. 
நிர்வாக இயக்குநர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், சென்னை-10. அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள். கூட்டுறவுச் சங்கங்களின் கூடுதல் பதிவாளர் (நுகர்வோர் பணிகள்), சென்னை-10. 
மாநில கணக்காயர், சென்னை-18. 
மாநில கணக்காயர் (தணிக்கை), சென்னை -18. 
சம்பளம் மற்றும் கணக்கு அலுவலர் (கிழக்கு), சென்னை-5. 

நகல்: முதலமைச்சர் அலுவலகம், சென்னை -9. 
மாண்புமிகு உணவுத் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை-9. மாண்புமிகு கூட்டுறவுத் துறை அமைச்சரின் நேர்முக உதவியாளர், சென்னை-9. தலைமைச் செயலாளரின் தனிச் செயலாளர், சென்னை-9. 
கூடுதல் தலைமைச் செயலாளரின் தனிச் செயலாளர், நிதித்துறை, சென்னை-9 கூடுதல் தலைமைச் செயலாளரின் தனிச் செயலாளர், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, சென்னை-9 நிதி (கூ.உ.(ம) நு.பா) துறை , சென்னை-9. தேசிய தகவல் மையம், சென்னை-9. 


No comments:

Post a Comment